May 27, 2024

Seithi Saral

Tamil News Channel

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உறுதி

1 min read

BJP, AIADMK led by NR Congress in Pondicherry Alliance Confirmation

9.3.2021

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி உறுதியாகியுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி, தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எடுக்கப்படும் முடிவுகளே புதுச்சேரி அரசியலிலும் பெரும்பாலும் பிரதி பலிக்கும். அந்த வகையில் புதுவையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன.

தொடர்ந்து அரசியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளில் இந்த கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தன. சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியிலும் இணைந்து செயல்பட்டன.

ரங்கசாமி

இந்த நிலையில் திடீரென கூட்டணியில் இருந்து பிரிந்து தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்ததுடன் ரங்கசாமியுடன் கூட்டணி குறித்து பேச முயன்றது. ஆனால் ரங்கசாமி பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், பெரும்பாலானோர் பா.ஜ.க. கூட்டணியை விரும்பாததே ரங்கசாமியின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.

கட்சிகளுடன் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு என்று அரசியல் களம் சூடுபிடித்து இருந்த நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கோவில், குளம் என ரங்கசாமி ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

புதுவை திரும்பிய பிறகும் கூட்டணி பேச்சுக்கு வராமல் போக்கு காட்டி வந்தார். பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால், நிர்மல்குமார் சுரானா ஆகியோரது சந்திப்பிலும் ரங்கசாமி எந்த உறுதியையும் அளிக்காமல் நழுவினார்.

கூட்டணி உறுதி

பா.ஜ.க. கூட்டணிக்கு பிடி கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் அமித்ஷா பேசியதையடுத்து ரங்கசாமியின் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதாவது, இன்னும் 3 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியே நீடிக்கும். எனவே சட்டமன்ற தேர்தலில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றாலும் அவர்கள் தயவு இன்றி யூனியன் பிரதேசமான புதுவையில் எதையும் சாதிக்க முடியாது என்பதால் பா.ஜ.க. கூட்டணியில் தொடர ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதுதொடர்பாக ரங்கசாமி வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. கூட்டணி தொடர்பாக முறைப்படி பா.ஜ.க. மேலிடம் அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.

இதனிடையே நேற்று என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் ரங்கசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து கேட்டனர். அவர்களில் ஒரு சிலரிடம் பா.ஜ.க.வுடன் கூட்டணி உடன்பாடு செய்து தேர்தலை சந்திக்க முடிவு செய்து இருப்பதாக ரங்கசாமி தெரிவித்ததாக என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் பா.ஜ.க.வுக்கு போக்கு காட்டி வந்த ரங்கசாமி தற்போது கூட்டணிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளதால் இதுநாள்வரை நீடித்து வந்த பரபரப்பு அதிரடியாக முடிவுக்கு வந்துள்ளது. மேலும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, தொகுதி உடன்பாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி இன்று உறுதியாகியுள்ளது. முதற்கட்டமாக பாஜக – என்ஆர் காங்கிரஸ் இடையே தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு கையெழுத்திட்டனர்.

புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இக்கூட்டணி உறுதி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்டது. இதன்படி புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என். ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் , அ.தி.மு.க. பாஜகவுக்கு 14 தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது.

என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.