கண்ணாடி பார்த்து அலறிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readKannayiram who screamed at the mirror/ a comic story / Tabasukumar
26.5.2024
கண்ணாயிரம் பழைய நினைவுகளை மறந்ததால் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றதையே மறந்துவிட்டார். சுற்றுலா அழைத்துச்சென்ற பயில்வானையும் மறந்து பேசினார். பயில்வான் தன்னை பயில்வான் என்று சொல்லியபோது கண்ணாயிரம் அவரிடம் எப்படி நம்பமுடியும் என்று கேட்க.. பயில்வான் உடனே அங்கிருந்த அம்மியை அலாக்காகத் தூக்கிக்காட்டினார். இது பெரிசா..நானும் அம்மியைத்தூக்குவேன் எனறு சொல்லிய கண்ணாயிரம் தானும் குனிந்து அம்மியை குனிந்து தூக்க முயல அது முடியாமல் நிமிர முடியாமல் திணற பயில்வான் ஒண் டூ திரி என்று சொல்ல.. கண்ணாயிரம் அப்பாட முடியல என்றபடி நிமிர்ந்தார்.
பயில்வான் அவரிடம் தோல்வியை ஒத்துக்கொள்கிறீர்களா என்று தனது தோள்களை கொட்டினார்.
உடனே கண்ணாயிரம்,ம்..தோல்வியா..நான் தோல்வியே அடைந்தது கிடையாது. நான் பெரிய ஆட்டு உரலை தூக்கிப் பழகியவன்.. இந்த அம்மியைத் தூக்கிப் பழகாததால் திணறுகிறது.. இதை தோல்வி என்று ஏத்துக்கொள்ள முடியாது என்றார்.
பயில்வான்,சரி..என்னை பயில்வான் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்க, கண்ணாயிரமோ..இந்த ஆட்டு உரலைத் தூக்குங்க..நான் உங்களை பயில்வான் என்று ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.
அதைக் கேட்ட பயில்வான்..யோவ்,வில்லங்கமான ஆளா இருப்பீர் போலிருக்கே..ஆட்டு உரலை தூக்க முடியாது என்க கண்ணாயிரமோ ,அப்படின்னா உங்களை பயில்வான் என்று நம்ப மாட்டேன் என்று சொன்னார்.
உடனே பயில்வான், ஏங்க..நீங்க நம்புங்க நம்பாம போங்க… குற்றாலத்துக்கு சுற்றுலா சென்ற செலவில் இரண்டாயிரம் ரூபாய் பாக்கித் தரணும் ..கொடுங்க என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் திடுக்கிட்டு..என்னது பாக்கியா என்க, பயில்வானோ..ஆமா குற்றாலத்துக்கு நேர் ரூட்டில போகாமல் மணப்பாறை முறுக்குவாங்க.. மணப்பாறைக்குப் போயி சுத்தி மதுரை வந்தோம். குற்றாலத்தில குளிக்க முடியலன்னு அகத்தியர் அருவிக்குப் போனோம்..பஸ் விபத்தாகி ஆஸ்பத்திரிக்கு போனது இப்படி ஏகப்பட்ட செலவு ஆகிட்டு..என்று இழுத்தார்.
கண்ணாயிரம் கோபத்தில்…ஏங்க நான் குற்றாலம் டூரே போகலை..ஏங்கிட்ட வந்து பாக்கி கேக்கீறீய..எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க.. இப்பதான் போட்டாவை எடுத்துக்கிட்டு வந்து ஒரு பொண்ணும் இளைஞர்களும் வந்து கேட்டாங்க.. விரட்டி அடிச்சேன்.. இப்போ நீங்க வந்து பாக்கி..பாக்கி என்கிறீய.. எனக்கு கோபம் வர்ரதுக்குள்ளே ஓடிடுங்க என்று மிரட்ட, பயில்வானோ.. நானே பயில்வான் என்னையே மிரட்டுறீயா ..அதோ நிக்கிறாங்களே அவங்கக்கிட்ட கேட்டுப் பாரும் குற்றாலத்துக்குப் போனீங்களா இல்லையா என்று சொன்னார்.
நான் ஏன் கேட்கணும் நீங்களே கேளுங்க என்று கண்ணாயிரம் சொல்ல, பயில்வான் உடனே, பூங்கொடியைப் பார்த்து..சொல்லுங்க குற்றாலம் போனீங்களா இல்லையா என்று கேட்டார்.
பூங்கொடி..ஆமா போனேன்..நீங்க எங்க அப்பாக்கிட்ட பாக்கியை வாங்கிக்கிங்க என்று சொல்ல, பயில்வான்…ம் அப்படி வாங்க வழிக்கு என்று சொல்லியவாறு அங்கிருந்து வெளியேறினார்.
பயில்வான் சென்றவுடன் ,கண்ணாயிரம் தன் உடல் பலத்தைப் பற்றி யோசித்தார். என்ன நமக்கு இருபது வயசுதானே ஆச்சு..பிறகு ஏன் அம்மியைக்கூட தூக்க முடியல.. புரியலையே என்று நினைத்தார். அப்போது அவருக்கு ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்தவர் மேல் சந்தேகம் வந்தது. அவன்தான் குண்டக்க மண்டக்கன்னு ஸ்கேன் எடுத்து கதிர் வீச்சு பண்ணி என்னுடைய பலத்தைக் குறைச்சிட்டான்னு நினைக்கிறேன் என்று பூங்கொடியிடம் சொன்னார்.
பூங்கொடியோ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லங்க.. ஸ்கேன் எடுத்ததினால பலம் ஒண்ணும் குறையாது என்றார்.
கண்ணாயிரம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நீங்க புரியாம பேசுறீங்க..போட்டா எடுத்தா ஆயுசு குறையுமுன்னு எங்க அம்மா போட்டோவே எடுத்துக்கல்ல.. போட்டோ எடுத்தாலே ஆயுசு குறையும் போது ஸ்கேன் எடுத்தா உடல் பலம் குறையாதா.. என்று கண்ணாயிரம் கேட்க, பூங்கொடியோ..ஏங்க..உங்க தலையை மட்டும் தானே ஸ்கேன் எடுத்தாங்க..அப்போ எப்படி உடம்புல பலம் குறையும் என்றார்.
கண்ணாயிரமும்..ஆமா..நான்தான் உடம்பு முழுவதும் மூளை இருக்கு..உடம்பெல்லாம் ஸ்கேன் எடுன்னு சொன்னேன்.. அவர் அதெல்லாம் வேண்டாம்.. தலையை மட்டும் எடுத்தாப் போதும் என்று நல்லவேளை தலையை மட்டும் ஸ்கேன் எடுத்தார் என்று சொன்னார்.
பூங்கொடியும் ஆமா, பாத்தீங்களா..உங்க உடம்பை ஸ்கேன் எடுக்கல அதனால உங்க பலம் போகல..சரியா என்றார்
கண்ணாயிரம்,அப்படியென்றால் என் பலம் எப்படி போச்சு என்று கேட்க,நீங்க அங்கும் இங்கும் சாப்பிடாம அலைஞ்சதினால பலம் இல்லாம தெரியுது..ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டீங்கன்னா பலம் வந்திடும் என்றார்.
கண்ணாயிரம் அப்படியா..ஆட்டுக்கால் சூப்பிலே அவ்வளவு சக்தி இருக்கா..அதை குடிச்சிட்டு அம்மியைத் தூக்கணும் என்றார்.
பூங்கொடியும்..சரி..ஆட்டுக்கால் சூப் குடிச்சப் பிறகு அம்மியைத் தூக்குங்க என்று சொன்னார்.
கண்ணாயிரம் சரி என்றபடி கட்டிலில் அமர்ந்தார்.
பின்னர் பூங்கொடியிடம்..ஆட்டுக்கால் சூப்குடிச்சா பலம் வந்திரும்..சரி..என் தலையிலே ஸ்கேன் எடுத்தானே..அதுல எதுவும் பாதிப்பு வந்திருக்குமா என்று கேட்டார். பூங்கொடி,எந்த பாதிப்பும் இல்லை தலை நல்லா இருக்கு..அழகாக இருக்கீங்க என்றார்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரம் வாயெல்லாம் பல்லாக சிரித்தார்.நான் அழகா இருக்கேனா..கண்ணாடியிலே பாத்துக்கிறேன் என்று எழுந்தார்.
பூங்கொடியோ..ஏங்க..அடிக்கடி கண்ணாடி பார்க்கக் கூடாது என்றார்.
கண்ணாயிரமோ..அடிக்கடிதானே கண்ணாடி பார்கக்கூடாது..நான் ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன் என்றார்.
பூங்கொடியோ..வேண்டாம்..வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தார்.
கண்ணாயிரமோ..நான் அழகாகதானே இருக்கேன்..முடி கரு கருன்னுதானே இருக்கு.. பிறகு ஏன் கண்ணாடியைப் பார்க்கக் கூடாது என்கிறீங்க என்றபடி கண்ணாடியை நோக்கி விரைந்தார்.
பூங்கொடி என்ன ஆகப் போகிறதோ என்று பயந்தபடி போகாதீங்க.. போகாதீங்க என்று சொன்னார்.
அதைக்கேட்காமல் கண்ணாயிரம் ஸ்டைலாக நடந்தபடி கண்ணாடியை எட்டிப்பார்த்து ஆ..என்று கத்தினார். கரு கரு என்றிருக்கும் என்று அவர் நினைத்த முடி பாதி வெள்ளையாக இருந்தது.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.