May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆதிச்சநல்லூரில் “நெற்றிக்கண் மனிதன்” வாழ்ந்ததாரா?

1 min read

Did the “nertrikan man” live in Adichanallur?

10/3/2021

“நெற்றிக்கண் மனிதன்” வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை!
17 ஆண்டுகளுக்குப்பின் வெளியானது

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வின் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது.

இங்கு முதன்முதலாக 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது. டாக்டர் ஜாகோர் என்பவர் இங்கு அகழாய்வு செய்து, இங்கு கிடைத்த பொருட்களை ஜெர்மனி கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து இங்கு பல அகழாய்வுகள் நடந்துள்ளன.

இதில், 1902-ல் அலெக்ஸாண்டர் இரியா என்பவர் அகழாய்வு செய்தபோது நூற்றுக்கணக்கான பொருட்களை எடுத்துச் சென்று சென்னையில் பார்வைக்கு வைத்துள்ளார். மேலும் இங்கு கிடைத்த பல்வேறு பொருட்களைப் பட்டியலிட்டுள்ளார்.
சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தியது
1920-ல் சிந்து சமவெளியை ஆய்வு செய்த வங்கதேசத்து அறிஞர் பானர்ஜி, “சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரிகம்” என்று கூறினார். இதனால் உலகமே ஆதிச்சநல்லூரை வியந்து பார்த்தது. ஆனாலும் ஆதிச்சநல்லூர் தொடர்பான முறையான அகழாய்வு அறிக்கை வரவில்லை.

இந்நிலையில், இந்திய தொல்லியல் துறை மூலமாக 2004-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வை சத்திய மூர்த்தி தலைமையிலான தொல்லியல் துறையினர் செய்தனர். ஆனால் இந்த அகழாய்வின் அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், “2004-ல் நடந்த அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும். மீண்டும் விரிவான அகழாய்வு நடத்த வேண்டும். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்’ என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்த சூழ்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. தொடர்ந்து அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. மேலும், ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் மாநில தொல்லியல் துறை சார்பில் கடந்த ஆண்டு அகழாய்வு பணி நடைபெற்றது. இந்த ஆண்டும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இணையத்தில் வெளியானது, அகழாய்வு அறிக்கை
இந்நிலையில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற அகழாய்வின் அறிக்கையை மத்திய தொல்லியல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அறிக்கை முறைப்படி வெளியிடாமல் இணையவழியில் வெளியிடப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை அதிகாரி சத்தியபாமா பத்ரிநாத் தயாரித்த 293 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் 2004-ல் ஆத்திச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் குறித்த முழுமையான விவரங்கள், அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற பொருட்களின் பட்டியல் படங்களுடன் இடம் பெற்றுள்ளன.

17 ஆண்டுகள் கழித்து வந்திருந்தாலும் இந்த அறிக்கை தமிழ் ஆர்வலர்களை, தொல்லியல் ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், எங்கள் வழக்கில் கேட்ட மூன்று கோரிக்கைகளும் தற்போது நிறைவேறிவிட்டன. தொடர்ந்து அகழாய்வு நடந்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசும், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசும் நிறைவேற்றியுள்ளன என்றார்.

நெற்றிக்கண் மனிதன் வாழ்ந்தானா?
தற்போது 17 ஆண்டுகள் கழித்து அகழாய்வு அறிக்கை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிக்கையில் ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன் இருந்தானா என்பதற்கான பதிலும் கிடைத்துள்ளது.
முத்து குளிக்கும் மக்களுக்கு ஒருவித நோய் வரும். அந்த நோயால் பாதிக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களே இந்த நெற்றிக்கண் மனிதர்கள் என தொல்லியல் துறை அதிகாரி சத்தியபாமா தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட மாநில தொல்லியல் துறையினரும், மத்திய தொல்லியல் துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பாமர மக்களுக்கு ஆதிச்சநல்லூர் பற்றிய விவரங்கள் போய்ச் சேரும் என்றார், அவர்.

——-=
மணிராஜ்,
திருநெல்வேலி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.