May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

திருச்சியில் தபால் வாக்குக்கு பணம் அளித்த புகாரில் 6 போலீசார் சஸ்பெண்டு

1 min read

6 policemen suspended for postal vote in Trichy

28.3.2021

திருச்சியில் தபால் வாக்குக்கு பணம் அளித்த புகாரில் 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

போலீசுக்கு பணம்

தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் (ஏப்ரல்) 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களின் தபால் வாக்குகளை கவரும் வகையில் அரசியல் கட்சியினர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் திருச்சி உறையூர், கண்டோன்மெண்ட், தில்லை நகர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளிட்ட மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், காவலர்களின் வாக்குகளை கவரும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு பணம் வைத்து வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சோதனை

இதன் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன், வருவாய்த்துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் மூலம் திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தில்லை நகர் காவல் நிலையங்களில் 30 கவர்களில் தலா 2 ஆயிரம் என மொத்தம் 60 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக முதன்மைச் செயலாளர் நேரு, இந்த விவகாரத்தில் தன்னுடைய பெயரை சம்பந்தப்படுத்தி சமூக வலைதளங்களில் சிலர் தவறாக பதிவிட்டு வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சஸ்பெண்டு

இந்த விசாரணையின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள் ஸ்டெல்லா, பாலாஜி, ரைட்டர் சுகந்தி ஆகிய நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வர் மீதும் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கவர்களை கொண்டு வந்து கொடுத்த திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிவண்ண பாரதி என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோல யாருக்கெல்லாம் கவர்களில் பணம் வழங்கப்பட்டுள்ளது, எவ்வளவு வழங்கப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் திருச்சியில் தபால் வாக்குக்கு பணம் அளித்த புகாரில் 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 8 காவல் நிலையங்களில் பணி புரிவோரை கூண்டோடு இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.