May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

டெல்லி ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு- மேலும் 25 பேர் பலி

1 min read

Oxygen shortage in Delhi hospitals – 25 more die

24.4.2021

டெல்லியில் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மேலும் 25 நோயாளிகள் இறந்துள்ளனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் நிறைய உயிர் இழப்புகள் ஏற்படடன. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் வினியோகத்தில் மத்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு மிக அதிக அளவில் உள்ளது. இதனால் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் புதிய நோயாளிகளை சேர்க்க மறுக்கப்படுகிறது. இதனால் பலர் உயிருக்காக போராடும் பரிதாபகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் 2 5 பேர் சாவு


ஏற்கனவே டெல்லி கங்காராம் மருத்துவமனையில் 25 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து இருந்தனர்.
இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் 25 நோயாளிகள் பலியாகி உள்ளனர்.

கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அரைமணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்பதால், 215 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அந்த ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்த்தனை போனில் தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

மேலும் 215 பேரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை முன்பு ஆம்புலன்ஸ்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன.

பஞ்சாப்

இதற்கிடையே பஞ்சாப்பில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள நீல்காந்த் தனியார் மருத்துவமனையில் 6 பேர் இன்று காலை ஆக்சிஜன் தட்டுப்பாடால் இறந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 5 பேர் கொரோனா நோயாளிகள் ஆவார்கள்.

டெல்லியில் மற்றொரு மருத்துவமனையான பத்ரா ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.சி.எல்.குப்தா கூறியதாவது:-

எங்கள் மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் 500 லிட்டர் ஆக்சிஜன் தான் கிடைக்கப் பெற்றுள்ளோம். எங்கள் மருத்துவமனையில் 350 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால் எங்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

சரோஜ் மருத்துவமனை தரப்பில் கூறும்போது, ‘எங்களிடம் போதிய ஆக்சிஜன் இல்லாததால், மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்திவிட்டோம். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளையும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றி வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆக்சிஜன் தராவிட்டால் டெல்லி சீரழிந்துவிடும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மாநில அரசு தரப்பில்

480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு தராவிட்டால், டெல்லியில் நிலைமை முற்றிலும் சீரழிந்துவிடும். ஆக்சிஜன் வழங்குவதற்கான உறுதியை மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக தரவேண்டும்.

120 மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சென்று சேருவதை உறுதிப்படுத்த 10 அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

பத்ரா மருத்துவமனை, ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை மற்றும் மகாராஜா அக்ராசென் மருத்துவமனை ஆகியவை தங்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனாநோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உடனடி தலையீட்டைக் கோரியதுடன், அவர்களின் ஆக்சிஜன் இருப்பு 30 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும் என்று டெல்லி ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.