May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை

1 min read

Sarita Nair jailed for 6 years in solar panel fraud case

27/4/2021
சோலார் பேனல் மோசடி வழக்குசரிதா நாயருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோழிக்கோடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

சரிதா நாயர்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள செங்கனூரை சேர்ந்தவர் சரிதா நாயர். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்பட பல நகரங்களில் ‘சோலார் சிஸ்டம்ஸ்‘ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் 2012-ம் ஆண்டு போலீசில் அளித்த புகாரில், சோலார் பேனல் அமைத்துக் கொடுப்பதாகக் கூறி சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரூ.42.70 லட்சம் மோசடி செய்துவிட்டதாகப் புகார் அளித்தார்.
பணத்தைத் திருப்பிக் கேட்டபோது பணத்தை வழங்காமல் மிரட்டினர் என்று மஜீத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் பிஜு ராதாகிருஷ்ணன், சரிதா நாயகர் முதல் மற்றும் 2-ம் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு 2018-ம் ஆண்டு, ஜனவரி 25-ம் தேதி முதல், விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதமே தீர்ப்பு வழங்க வேண்டியது. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

6 ஆண்டு சிறை

நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் சரிதா நாயர் ஆஜராகாததை அடுத்து, கடந்த 5 நாட்களுக்கு முன் சரிதா நாயரைக் கோழிக்கோடு மாவட்டம் கசபா போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த நிலையில் சோலார் பேனல் வழக்கில், கோழிக்கோடு முதன்மை நீதிபதி கே.நிம்மி நேற்று தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், சோலார் பேனல் மோசடி வழக்கில் 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 4 விதமான குற்றச்சாட்டுகளுக்குத் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் மீதான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த பி.மணிமோன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சரிதா நாயருக்கு எதிராக ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோழிக்கோடு நீதிமன்றங்களில் ஏற்கெனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சூரிய ஒளி தகடு மோசடி மட்டுமல்லாது கேரளாவில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் சரிதா நாயர் என்பது குறிப்பிடதக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.