May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

14 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடு; மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

1 min read

Strict control for 14 days; Federal Government Letter to the States

27.4.2021
கொரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் உள்ளூர் அளவில் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

14 நாட்கள்

கொரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் உள்ளூர் அளவில் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாட்டை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து நாட்டில் எதிர்பாராத சூழல் நிலவி வருவதால் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உள்ளூர் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

கடிதம்

இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் 10 சதவீதத்தை தாண்டினாலோ அல்லது ஆக்சிஜன் படுக்கை வசதியில் 60 சதவீதம் நிரம்பினாலோ அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தலாம்.

வைரஸ் பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களையும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாச்சாரம், ஆன்மிகம், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. திருமணத்தில் 50 பேரும், இறுதிச் சடங்கில் 20 பேரும் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

50 சதவீத பயணிகள்

பெரிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், மதுபான பார்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், நீச்சல் குளங்கள், ஆன்மிக தலங்களை மூடலாம். இரவு நேர ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்தலாம்.

சுகாதார சேவைகள், போலீஸ், தீயணைப்பு, வங்கி, மின்சாரம், குடிநீர், தூய்மை பணி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ரெயில், மெட்ரோ ரெயில், பேருந்து, வாடகை கார்களில் 50 சதவீத பயணிகளை அனுமதிக்கலாம். அரசு, தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.

கட்டுப்பாடுகள்

மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது. உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஒரு பகுதியில் 14 நாட்கள் வரை கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம்.

கட்டுப்பாட்டு பகுதிகள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். உள்ளூர் மொழியில் சுற்றுவட்டார பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கலாம். கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சேவையாற்ற தன்னார்வலர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரை பயன்படுத்தலாம்.

வீடுவீடாக…

வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் உள்ளோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரையும், அவரது குடும்பத் தினரையும் அவரோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும். தற்காலிக மருத்துவமனைகளை அதிக அளவில் அமைக்க வேண்டும்.

வீட்டில் சிகிச்சை பெறுவோருக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும். அவர்கள் என்ன செய்ய வேண்டும். என்ன செய்ய கூடாது என்பன குறித்த துண்டு பிரசுரத்தை வழங்க வேண்டும். முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளை கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

நம்பிக்கை

கொரோனா தடுப்பூசி போடும் பணியை அனைத்து மாநில அரசுகளும் விரைவுபடுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்படுவோரில் 98 சதவீதம் பேர் குணமடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்ப்ட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.