நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் 12 பேர் கொரோனாவால் பாதிப்பு; நிர்வாகத்தின் பாராமுகத்தால் மருத்துவமனை வரும் பொதுமக்களுக்கும் தொற்று பரவும் ஆபத்து
1 min readதிருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பட்டமேற்படிப்பு உறைவிட மருத்துவர்கள் 300-கும் மேற்பட்டோர்; வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் ஆகிய அனைவரையும் கவனித்து வருகிறார்கள். தற்போது கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள்பெருகி வருவதால், 37 க்கும் மேற்பட்ட பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் வாரந்தோறும் கோவிட் சிகிச்சை மையத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள். கோவிட் நோய்த்தொற்று உள்ள நோயாளிகள் இப்போது அதிக அளவில் அறிகுறிகள் இன்றி சிகிச்சைக்கு வரும் நிலையில், அவர்களை கவனிக்கும் மேற்குறிப்பிட்ட மருத்துவர்களும் கோவிட் தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
மேலும் மேலும் தொற்று பரவும் அபாயம்
ஆனால், கல்லூரி வளாகத்திற்குள் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தங்குவதற்கு தனி ஏற்பாடுகள் இல்லை. எனவே, கோவிட் வார்டில் பணியாற்றும் இளம் மருத்துவர்கள்; கோவிட் அல்லாத மருத்துவர்கள் தங்கும் அதே விடுதிகளில் தங்கியிருக்கின்றனர். அனைவருக்கும் பொதுவான தங்குமிடம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, உணவு விடுதி வசதி என எல்லாமே பொதுவாக இருப்பதால்,கோவிட்தொற்று பாதித்த மருத்துவரிடம் இருந்து தொற்று இல்லாத மருத்துவருக்கும் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. கோவிட் பாதித்த ஒரு மருத்துவர் அவரது வீட்டில் போய்த் தங்கினாலும், அவரால் அவருடைய தாய்-தந்தை, உடன்பிறப்புகள் மற்றும் உடன் இருப்போர் அனைவருக்கும் தொற்றுதொற்றிக்கொள்ளும் பேரபாயம் இருக்கிறது.
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதால் கோவிட் தொற்றுக்கு ஆளாகும் முதுகலை பட்டதாரிகளின் சிகிச்சைக்கோ, தனிமைப்படுத்திக்கொள்வதற்கோ எந்த ஏற்பாடும் இல்லை. அவர்கள் ஒரேவிடுதியில் தங்கியிருந்து அவர்களை அவர்களே கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இது அதே விடுதியில் இருக்கும் மற்ற பட்டமேற்படிப்பு மருத்துவர்களின் தொற்றுக்கும் வழிவகுக்கிறது.
மேலும், கோவிட் தொற்றுக்கு ஆளாகும் மருத்துவர்கள் மருத்துவமனையில் மற்ற நோயாளிகளுக்கும், தினம் தினம் இங்கு வரும்ஏராளமான பொதுமக்களுக்கும் இந்த நோயை எளிதில் பரப்பும் அபாயமும் இருந்துகொண்டு இருக்கிறது.
2 வாரமாக குரல் எழுப்பியும் பயனில்லை
இந்த மோசமான சூழலைத் தடுப்பதற்காக, கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பவர்களுக்கு தனித்தனி அறைகளையும்,கோவிட் பாசிட்டிவ் கண்டறியப்படும் மருத்துவர்களுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டுகளையும் வழங்குமாறு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனை டீனிடம் கோரி வருகிறார்கள். ஆனால் இன்னும் அவர்களுக்கு முறையான எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.
அதே நேரம் நாளுக்கு நாள் இப்பெருந்தொற்று பெருகி மாவட்ட அளவில் ஒரு நாள் தொற்றின் எண்ணிக்கை 800-ஐ கடந்து விட்ட நிலையில், தொற்றுக்கு ஆளாகியுள்ள பட்டமேற்படிப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்கள் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டபோதிலும், அவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. தொற்றின் தீவிர நிலையை தடுப்பூசி தடுத்து அவர்களை பாதுகாத்தாலும், அவர்களிடம் இருந்து பிறருக்கு பரவும் சூழலைத்தடுத்திட குறிப்பிட்டகால இடைவெளியில் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மிக மிக அவசியம். அதோடு, வார்டுகளிலும், தீவிர கண்காணிப்பு பிரிவிலும் பணியாற்றும் தொற்று பரவாத மருத்துவர்களுக்கு கையுறை, என்-95 முகக்கவசம், கவச உடை ஆகியவை தட்டுப்பாடு இன்றி போதிய அளவு சப்ளை செய்யப்படவேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.
கோவிட் வார்டு பணியை புறக்கணிக்க முடிவு
கொரோனா 2-ம் அலையின் வீச்சு மிகமிகக் கடுமையாக இருக்கும் இந்நேரத்தில் அவர்கள் தாங்கள் பணியாற்றும் அதே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது என்று கருதுகின்றனர். ஆனால் அவர்களுக்கு தற்போது ஒதுக்கப்படும் புற்றுநோய் அறுவை சிகிச்சை வார்டில் சுத்தம், சுகாதாரம் உள்ளிட்டதேவையான எந்த வசதியும் இல்லை. எனவே, சத்தான ஆகாரம், குடிநீர், சுத்தமான கழிவறை, தங்கு தடையற்ற மருந்து சப்ளை,தொடர் பரிசோதனை வசதி ஆகியவற்றுடன் கூடிய தனி வார்டு ஒன்றை தங்களுக்கு ஒதுக்கித்தரவேண்டும் என்று மீண்டும் மீண்டும் முறையிட்டும் எதுவும்நிறைவேறாத பட்சத்தில் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் அனைவரும் கூடிப்பேசி, இனியும் இந்நிலை தொடருமானால், “கோவிட் வார்டில் இனி பணியாற்றுவதில்லை” என்ற முடிவை எடுக்க உள்ளனர்.
அதன் முதல் கட்டமாக பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் அனைவரும் இன்று காலை தத்தம் அத்தியாவசிய மருத்துவப் பணிகளை முடித்து விட்டு டீன் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். நோயாளிகளையும், அவசர சிகிச்சைகளையும் பாதிக்காத வண்ணம் தங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் டீனுக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளனர்.