May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்தியதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு விருது

1 min read

Award to Union Health Minister Harshavardhan for controlling tobacco use

31/5/2021
புகையிலைப் பயன்பாட்டைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகவும், மக்களிடையே பயன்பாட்டைக் குறைத்தமைக்காகவும் உலக சுகாதார அமைப்பின் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு இந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

புகையிலை கட்டுப்பாடு

உலக அளவில் 6 பிராந்தியங்களில் உள்ள தங்கள் கிளைகள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்குப் புகையிலை கட்டுப்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, உலக சுகாதார அமைப்பு இயக்குநரின் சிறப்பு அங்கீகார விருது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இந்தியாவில் இ-சிகரெட்டை ஒழிக்கவும், சூடுபடுத்தப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒழிக்கவும் சட்டம் இயற்றியதற்கு அங்கீகாரம் வழங்கும் விதத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் அறிவித்துள்ளார்.

சிறப்பு அங்கீகார விருது

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசிஸ் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த ஆண்டு சிறப்பு அங்கீகார விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இ-சிகரெட், சூடுபடுத்தப்பட்ட புகையிலையை ஒழிக்க அவரின் தலைமை எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

உறுதி மொழி

இதற்கிடையே உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இன்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவரும் புகையிலை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் பேசுகையில் கூறியதாவது:-
புகையிலை பயன்பாட்டைக் குறைக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகள் மனநிறைவாக உள்ளன. 2009இல் புகையிலைப் பயன்பாடு 34.6 சதவீதமாக இருந்தது 2016-17ல் 28.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான புகையிலை ஒழிப்பு தினத்தில், புகையிலையைக் கைவிட உறுதி எடுப்போம் என்ற முழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகையிலை கட்டுப்பாடு ஆய்வுக் குழுவுக்கு உலக சுகாதார அமைப்பும், பிரிட்டனின் பாத் பல்கலைக்கழகமும் அங்கீகாரம் அளித்துள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.