May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

‘ஒன்றிய அரசு’ என்று தொடர்ந்து சொல்வோம்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்

1 min read

We will continue to say ‘Union Government’ – MK Stalin’s explanation in the Assembly

23-.6.2021
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று பல்வேறு உறுப்பினர்கள் பேசினார்கள்.

நயினார் நாகேந்திரன்

பா.ஜனதா உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, ‘‘மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கிறார்கள். எதற்காக அப்படி அழைக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? என்பது பற்றி சபையில் முதல்வர் விளக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தவறாக நினைக்க வேண்டாம்

ஒன்றிய அரசு என்று அழைப்பதை குறையாக யாரும் நினைக்க வேண்டாம். அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியா மாநிலங்களைக் கொண்ட ஒன்றியம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஒன்றியம் என்ற வார்த்தை தவறான பொருள் அல்ல. எனவே அதனை கேட்டு மிரள வேண்டாம். ஒன்றியம் என்ற வார்த்தையை நாங்கள் புதிதாக பயன்படுத்தவில்லை.

பெரியார், அண்ணா ஆகியோர் கூறியதைதான் நாங்களும் சொல்கிறோம். இதற்கு முன்பு தலைவர் கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், ஒன்றிய அரசு என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

கூட்டாட்சி தத்துவத்தின் கீழ்தான் ஒன்றியம் என்ற வார்த்தை இடம்பெறுகிறது. எனவே தொடர்ந்து அதை நாங்கள் பயன்படுத்துவோம்.

இதைதொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், ‘இந்தியாவுக்குள் தான் பல்வேறு மாநிலங்கள் உள்ளன. பல்வேறு மாநிலங்கள் அடங்கியது இந்தியா அல்ல. எனவே ஒன்றியம் என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்த முடியும்?’’ என்று மீண்டும் கூறினார்.

இதற்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார். அவர் கூறும்போது, ‘‘எல்லா மாநிலங்களும் இணைந்த ஒன்றியம் தான் இந்தியா’’ என்று கூறினார்.

சபாநாயகர் அப்பாவு

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘‘உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இந்த விவகாரத்தை விட்டுவிட்டு கவர்னர் உரையை பற்றி மட்டும் பேச வேண்டும். இதுபற்றி வேறொரு நாளில் விவாதிக்கலாம்’’ என்று கூறினார்.

இதையடுத்து ஒன்றியம் தொடர்பான விவாதம் முடிவுக்கு வந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.