May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் லட்சத்தீவு நிர்வாகம் புகார்

1 min read

Lakshadweep administration files complaint against Ayesha Sultana in Kerala High Court

24.6.2021

கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக ஆயிஷா சுல்தானா மீது கேரள ஐகோர்ட்டில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

லட்சத்தீவு

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக பிரபுல் ஹோடா படேல் செயல்பட்டுவருகிறார். பிரபுல் ஹோடா படேல் தலைமையிலான நிர்வாகம் லட்சத்தீவில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆனால், லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

நடிகை ஆயிஷா சுல்தானா

இதற்கிடையில், லட்சத்தீவு விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரளாவின் பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா பங்கேற்றார்.

லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த ஆயிஷா சுல்தானா கேரளாவில் வசித்து வரும் நிலையில் அந்த விவாத நிகழ்ச்சியின்போது, கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது. பிரபுல் ஹோடா படேலை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறினார்.

தேசத் துரோக வழக்கு

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க ஆயிஷா சுல்தானா கடந்த 17-ம் தேதி கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். அவருக்கு ஒருவாரம் (இன்று வரை) முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக லட்சத்தீவில் உள்ள கவரத்தி காவல் நிலையத்தில் ஆயிஷா 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். நேற்று காவல் நிலையத்தில் ஆஜரான ஆயிஷாவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்ட போதும் அடுத்த கட்ட விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அதுவரை லட்சத்தீவில் இருக்கும்படி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறை மீறல்

மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அதை தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆயிஷா சுல்தானாவுக்கு லட்சத்தீவு நிர்வாகம் தரப்பில் அனுப்பப்பட்டது.

ஆனால், பொது இடங்களில் சுற்றித்திரிந்ததாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீது கொரோனா நோயாளிகளை சந்தித்து பேசியதாகவும் ஆயிஷா சுல்தானா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக லட்சத்தீவு பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை ஆயிஷா சுல்தானா பின்பற்றவில்லை என்று கேரள ஐகோர்ட்டில் லட்சத்தீவு நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

மேலும், ஐகோர்ட் வழங்கியுள்ள சலுகைகளை ஆயிஷா சுல்தானா துஷ்பிரயோகம் செய்தவாகவும் லட்சத்தீவு நிர்வாகம் தரப்பில் ஆவணங்கள் சம்ர்ப்பித்துள்ளது.
முன்னதாக, தேசத்துரோக வழக்கில் ஆயிஷா கைது செய்யப்பட்டால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.