கடையத்தில் பாரதியார்-செல்லம்மாள் சிலை திறப்பது உறுதி; சபாநாயகர் அறிவிப்பு
1 min read
Bharathiyar-Sellammal statue to be unveiled at Kadayam; Speaker’s announcement
27.6.2021
கடையத்தில் பாரதியார்-செல்லம்மாள் சிலை வைப்பது உறுதி என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
பாரதியாரின் மனைவி செல்லம்மாள் கடையத்தில் பிறந்தார். பொதுவாக மறைந்த தலைவர்கள், ஆன்றோர்களுக்கு பிறந்த நாள்தான் கொண்டாடப்படும். கடையத்தில் பாரதியார்-செல்லம்மாள் திருமண நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் அந்த விழாவை மறைந்த பேராசியர் எல்.எம்.நாராயணன் பாரதி மன்றம் சார்பில் கொண்டாடி வந்தார். அவரது மறைவுக்குப்பிறகு அந்த விழா கொண்டாடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் திருமண நாள் கடையத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 27.6.2021 ஞாயிற்றுக்கிழமை 124 ஆவது திருமண நாள் விழா கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு. முரளிதரன் வரவேற்புரை அளித்து விழாவினை தொடங்கி வைத்தார்.
அவர் பேசும்போது, “எட்டையபுரம், திருவல்லிக்கேணி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் பாரதியாரை போற்றும் வகையில் அவரின் திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளன. பாரதி செல்லம்மாள் நினைவாக கடையம் பகுதியில் ஏதும் இல்லாத நிலையில் கடையத்தில் செல்லம்மாள் வாழ்ந்த வீட்டின் அருகில் இத்தம்பதியினருக்கு சிலை வைக்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி ஏழடியில் சிலை உருவாக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாகிறது. ஆனால் சிலை வைக்க அரசு அனுமதிக்காக காத்திருக்கிறோம். அரசு அதற்கு அனுமதி தர வேண்டும்” என்று பேசினார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். அவர் பாரதியார் கவிதைகளை சிறுவயது முதல் சுவைத்த அனுபவத்தைப் பற்றி கூறினார். பெண் கல்வி, தேச ஒற்றுமைக்காக போராடிய பாரதியார் பயமின்றி தன் கருத்தை சமூகத்திற்கு வெளிப்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டார். பலருக்கும் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்த பாரதியாரின் கொள்கைகளைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான சாமான்யர்களுக்கு எழுத்தறிவு அளிக்கும் சேவாலயா நிறுவன சேவைகளை பாராட்டினார்.
சேவாலயா நிறுவனர் முரளிதரன் அவர்கள் கடையத்தில் பாரதி சிலை வைப்பது தொடர்பாக அளித்த கோரிக்கைகளை ஆராய்ந்து தமிழக அரசு பாரதியாரின் அடுத்த வருட திருமணநாளுக்குள் சிலையை தூக்கி நிறுத்தும் என்றார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் எஸ்.கோபாலசுந்தர்ராஜ்
பேசும்போது, செல்லம்மாள் வசித்த வீட்டின் அருகே சிலை வைக்க சில சிக்கல்கள் இருப்பததாகவும் வேறு இடத்தை தேர்வு செய்தால்(நூல்நிலைய வளாகத்தில்) அங்கு வைக்க அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார்.
உடனே சேவாலயா நிறுவனர் முரளிதரன் அக்ரஹாரத்தில்தான் வைக்க வேண்டும் என்றும் அதுதான் பாரதிக்கு கொடுக்கும் மரியாதை என்றும் கூறினார்.
பரந்தாமன் எம்.எல்.ஏ சேவாலயாவின் வளர்ச்சி பற்றி கூறினார். தான் சிறுவனாக இருந்தபோது பிடி அரிசியினை சேமித்து வைத்து சேவாலயாவிற்கு கொடுத்ததையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேசினார். ஸ்ரீதர் வேம்பு சேவாலயா நிறுவன சேவைகளை பாராட்டினார்.
தென்காசியில் இளைஞர்களுக்கு பல வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக கூறினார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமார் . சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி செயலாளர் பி டி சாமி ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மகாகவி பாரதி செல்லம்மாள் கொள்ளுப் பேரன் ராஜ்குமார் பாரதி மற்றும் இசைக்கவி ரமணன்
விழாவிற்கான வாழ்த்துரையை காணொளி காட்சி வாயிலாக பகிர்ந்து கொண்டார்கள்.
மளிகை பொருட்கள்
திருமண நாள் நிகழ்வை முன்னிட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 ஏழை எளிய குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குரிய மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் பாரதி செல்லம்மாள் வாழ்வியல் நிகழ்வுகளை தலைப்புகளாக கொண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு வினாடி வினா, பேச்சுப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி ஆகியவை இணையதள வழியாக நடத்தப்பட்டன. இதில் சுமார் 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர். தலைமை பண்புக்கல்வி காஞ்சனா, வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை அறிவித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு சேவாலயா அறங்காவலர் லஷ்மி நாராயணன் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
துணை தலைவர் ஏ.ஏ. கிங்ஸ்டன் நன்றி கூறினார்.
கொரோனா நிவாரண நிதி
இந்த விழாவில் கடையம் அனைத்து துறை ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10,001ஐ சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் வழங்கப்பட்டது. பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கல்யாணி சிவகாசி நாதன், இந்திரஜித், பி.முருகன், கோபால், சின்னசாமி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் இதனை வழங்கினார்கள்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமுதாய கல்லூரி பொறுப்பாளர்
சங்கிலி பூதத்தான் செய்திருந்தார்.