April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் தள்ளுபடி

1 min read

Dismissal of writ petitions against the Land Acquisition Act of the State of Tamil Nadu

29.6.2021

தமிழ்நாடு அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கைள சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

நிலம் கையகப்படுத்தல்

நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து இந்த சட்டத்தை புதுப்பிக்கும் வகையில் நில கையகப்படுத்தும் புதிய சட்டத்தை தமிழ்நாட அரசு கொண்டு வந்தது.

இந்த சட்டத்திற்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் உள்ளிட்ட 55 பேர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இது தொடர்பாக கடந்த 23 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், இந்த வழக்கில் ரிட் மனுதாரர்கள் விவசாயிகள் என்ற பெயரில், மாநில அரசு தங்களை சுரண்டி வருவதாகக் கூறி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.

இழப்பீடு

மனுதாரர்களுக்கு உரிய இழப்பீட்டை மாநில அரசு வழங்கியுள்ளது என்றும் சாலை, விமான நிலையம் உள்ளிட்டவற்றை உருவாக்குவதற்காக போடப்படும் திட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளின் அவசியத்தை சுப்ரீம் கோர்ட்டு 8 வழிச்சாலை வழக்கில் சுட்டிக்காட்டியிருப்பதையும் குறிப்பிட்டு அவர் தனது வாதங்களை முன்வைத்தார்.

ரிட் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மத்திய அரசின் கையகப்படுத்தும் சட்டத்தின்படி தனியார் நிறுவனங்களுக்கு நியாமான இழப்பீடு, மறுவாழ்வு, வெளிப்படைத்தன்மை, மறு குடியமர்வு உள்ளிட்டவை தமிழ்நாடு அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்தில் இல்லை எனவும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த திட்டத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர முடியும் எனவும் வாதிட்டார்.

தள்ளுபடி

இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி தமிழ்நாடு அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் தமிழக அரசின் நில கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக மனுதாரர்கள் அளித்த வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.