May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

Lifting of ban on operation of Uppur Thermal Power Station; Order of the Supreme Court

1/7-/2021

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

உப்பூர் அனல்மின்நிலையம்

ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடன், இரு அனல் மின் நிலையங்கள் அமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் முடிவு செய்தது. இதற்காக சுற்றுச்சூழல் ஒப்புதல் கோரி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு விண்ணப்பித்தது.
இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஒப்புதல் வழங்கிப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அப்பகுதி மக்கள் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

விவசாய நிலம்

அந்த மனுவில், அனல் மின் நிலையம் அமைப்பதற்காகக் கையகப்படுத்த திட்டமிடப்பட்ட, ஆயிரத்து 342 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்கள் எனவும், எந்தப் பொது விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு முறையாக நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க வழங்கிய ஒப்புதல் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, அதை நிறுத்திவைக்க உத்தரவி்ட்டது.

மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு மீண்டும் ஆய்வு செய்து, ஆறு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் எனவும், அதுவரை உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.

இதையடுத்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த நிலையில், இந்த மேல் முறையீட்டு மனு இன்று சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதால் மாதத்திற்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும், அங்கு இருக்கக் கூடிய கருவிகள் மற்றும் பொருட்கள் பழுதடைந்து விடும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, மனுதாரர் மற்றும் சுற்றுச்சூழல் துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.