June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 39,796 ஆக குறைந்தது; சாவு 723

1 min read

Daily corona exposure in India dropped to 39,796; Death 723

5/7/2021

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 39,796 ஆக குறைந்தது. சாவு எண்ணிக்கையும் 723 ஆக குறைந்தது

குறைந்து வரும் கொரோனா

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களைத் தொட்டு மக்களை கலங்கடித்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இப்போது தினந்தோறும் குறைந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரவல், இறப்பு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருவது நிம்மதிப்பெருமூச்சு விட வைக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை 46 ஆயிரத்து 617 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இது சனிக்கிழமை மேலும் சரிந்து 44 ஆயிரத்து 111 ஆக பதிவாகியிருந்தது. நேற்று 43,071- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு மேலும் சரிந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்ற காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

39,796 பேருக்கு கொரோனா

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 7.6 சதவிகிதம் குறைந்துள்ளதாகும்.

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 42,352 பேர் குணம் அடைந்துள்ளனர். தொடர்ந்து 53-வது நாளாக பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கையை விட குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 82 ஆயிரத்து 071 ஆக குறைந்துள்ளது.

வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தொடர்ந்து 5 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.40 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த மார்ச் 19 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட குறைந்தபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

723 பேர் சாவு

நாடு முழுவதும் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 723- பேர் உயிரிழந்துள்ளனர். முந்தைய நாள் 955 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *