12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி தடுப்பூசி விரைவில் அனுமதி வழங்கப்படும்
1 min read
The Zygov-T vaccine for those over 12 years of age will soon be approved
12.7.2021
12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி தடுப்பூசி அவசர காலப் பயன்பாட்டின் கீழ் விரைவில் அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தடுப்பூசி
12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி என்ற தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அமைப்பு இன்னும் சில நாட்களில் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஜைடோஸ் காடிலா நிறுவனம் ஜூலை மாதம் 1-ந் தேதி அன்று ஜைகோவ்-டி க்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல் அமைப்பிடம் விண்ணப்பித்தது.
பரிசோதனை
ஜைகோவ்-டி தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டோரிடமும், அதே போல 12 வயதுக்கு மேற்பட்டோரிடமும் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் அடிப்படையில், ஜைகோவ்-டி தடுப்பூசி திருப்திகரமான செயல்பாட்டைக் கொண்டிருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தடுப்பூசி ஆய்வு வல்லுநர் ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜைகோவ்-டி தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பங்கேற்போர், தங்கள் தடுப்பூசியின் திறனை நிரூபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரப் பயன்பாட்டுக்கு..
இது குறித்து பேசிய தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய வல்லுநர் குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறும்போது, “12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும். எனினும், இந்த தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டுக்காக அனுமதி சில வாரங்களில் வழங்கப்பட உள்ளது,” என்று கூறினார்.
12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜைகோவ்-டி பாதுகாப்பானது என்று தரவு காட்டுகிறது, ஆண்டுதோறும் 100-120 மில்லியன் டோஸ் தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜைடஸ் ஒப்புதல் பெற்றவுடன், ஜைகோவ்-டி இந்தியாவில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாவது கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியாக இருக்கும் அஸ்ட்ராஜெனெகா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகியவை அனுமதி பெற்று தற்போது இந்தியாவில் போடப்பட்டு வருகின்றன.