இன்று டாக்டர் கிடையாது- எழுதியவர் முத்துமணி
1 min read
There is no doctor today – by Muthumani
15.7.2021
அண்மையில் கோரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஆரம்ப சுகாதார நிலையத்திற்குப் போனேன். சீட்டு வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன். அங்கு சீட்டு வாங்காத, அதாவது பெயர் பதிவு செய்யாத பெண்கள் சிலர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்,அங்கு ஊசிபோடும் பொறுப்பிலிருந்த சகோதரி. உடனே “இன்று டாக்டர் கிடையாது. இன்று அரசாங்க லீவ். தடுப்பூசி மட்டும்தான். அதுவும் எங்களுக்கு ஸ்பெஷல் டூட்டி. டாக்டரைப் பார்க்க வேண்டுமானால், நீங்கள் நாளைக்கு வாருங்கள்.” என்று சொன்னது காதில் விழுந்தது.
டாக்டர் கிடையாதா? அதென்ன டாக்டர் கிடையாது….வழக்கம்போல் மூளைக்குள் குறுகுறுப்பு.. கிடையாது என்பதை அஃறிணையில்தானே பயன்படுத்த வேண்டும்.
நாளை பள்ளிக்கூடம் கிடையாது என்று சொன்னாலும் பள்ளிக்கூடம் அங்குதான் இருக்கும் ஆனால் ஆசிரியர் மாணவர் வருகை இருக்காது. கற்றல் கற்பித்தல் நடைபெறாது. அதாவது பள்ளி இயங்காது என்பதுதானே பொருள்.
அப்படியானால் இங்குள்ள டாக்டர் மனிதரே இல்லையோ?? என்று எண்ணியதும் சிரிப்பு வந்தது. சரி நாங்கள் என்ன தமிழ் இலக்கியம் படித்தவர்களா? என்று கேட்டால் என்ன சொல்ல? அன்றாடம் பயன்படுத்தும் தமிழ்ச் சொற்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்குத் தமிழைச் சிறப்பாகப் பாடமாக எடுத்துப் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழராகப் பிறந்திருந்தால் போதுமே என்ற எண்ணமும் சேர்ந்தே நமக்கு வந்துவிடும். ஒருவேளை இப்படி நினைப்பதுதான் நம்மிடம் உள்ள குறைபாடோ?
படித்த மனிதர் ஒருவர் கடைக்கு வந்தார். சர்க்கரை கேட்டார். கடைக்காரர் பெருமைக்காக, “சுகர் அவுட் ஆஃப் ஸ்டாக் சார் நாளைக்கு வந்து விடும்.” என்று சொன்னார். கடையில் பணியாற்றும் பையன் காதில் விழுந்துவிட்டது. ஓஹோ இல்லை என்பதற்கு இப்படிச் சொல்ல வேண்டுமா..
மறுநாள் கடைக்காரர் வெளியூர் சென்றிருந்தார். கடைக்கு வந்த அவரது நண்பர்,” கடைக்காரரை எங்கே?” என்று கேட்டபோது பையன் சொன்னான், “கடைக்காரர் அவுட் ஆப் ஸ்டாக். நாளைக்கு வந்து விடும்.”
நான் அல்லேன்
நாம் அல்லேம்
நாம் அல்லோம்
யாம் அல்லேம்
யாம் அல்லம்
நீ அல்லை
நீர் அல்லர்
நீவிர் அல்லர்
அவன் அல்லன்
அவள் அல்லள்
அவர் அல்லர்
அது அன்று
அவை அல்ல
இது அன்று
இவை அல்ல
இப்படியெல்லாம் வேறுபாடறிந்து விகுதிகளில் தகுந்த மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. திணை பால் எண்… சரியாகப் பயன்படுத்த வேண்டியதவசியம்.
சொற்களைப் பயன்படுத்துவதில் இடர்ப்பாடு ஏற்படுகிறது.. என்னால் இவற்றைச் சரியாக சரியான இடத்தில் பொருத்தமாகக் கையாள முடியவில்லை… என்று சொன்னால்…. அதற்கு ஒரே மாற்று வழி, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ‘இல்லை” என்பதைப் பயன்படுத்துவதுதான்…
நான் இல்லை
நாம் இல்லை
நாங்கள் இல்லை
நீ இல்லை
நீவிர் இல்லை
அவன் இல்லை
அவர் இல்லை
அது இல்லை
அவை இல்லை
இது இல்லை
இவை இல்லை
இந்த ‘இல்லை’ என்பதைப் பயன்படுத்துவதற்கு திணை, பால், எண், இடம் எவையும் தடையில்லை. ‘இல்லை’ என்பது பொது வினைச்சொல்.
இதைப்போல’ உண்டு’ என்பதும் எல்லா இடங்களிலும் பொதுவாகப் பயன்படும்..
இக்கடையில் பீடி போன்ற பொருட்கள் கிடையாது.
இன்று இட்லிக்குச் சட்னி கிடையாது.
இந்த ஊரில் திரையரங்கம் கிடையாது.
இங்குத் திருக்குறள் நூல் கிடைக்கும்.
என்னிடம் சிறிது பணம் பணம் கூட கிடையாது.
இவனுக்குத் தாய் தந்தையர் கிடையாது என்று சொல்லக்கூடாது தாய் தந்தையர் உயர்திணை அல்லவா? தாய் தந்தையர் இல்லை….
மேலே உள்ள அல்லன், அல்லோம் உட்பட அவையெல்லாம் முடியாதென்றால் ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்…
‘இல்லை’
கிடையாது என்னும் சொல் பயன்படுத்தப்பட வேண்டிய இடத்தில் இல்லை என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். தவறு ஒன்றும் இல்லை. ஆனால் கிடையாது என்னும் சொல்லை மட்டும்தான் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
இன்று டாக்டர் இல்லை என்றோ, இன்று டாக்டர் வரவில்லை என்றோ, இன்று டாக்டர் வர மாட்டார். நாளை இருப்பார். என்றோ அந்தச் சகோதரி சொல்லியிருந்தால் முறையாக இருந்திருக்கும். இந்தக் கட்டுரைக்கும் அவசியம் இல்லாமல் போயிருக்கும்.
வேலைக்கு ஆட்கள் இல்லை வேலை ஆட்கள் இல்லை அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை…
தமிழ் முத்துமணி.