May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இலக்கணமும் இனிக்கும்/ஆனா…ஆவன்னா/முத்துமணி

1 min read

ammar is sweet / Muthumani

அ ஆ இ ஈ ஈ ஊ….

“சங்கரா இதைப் படி”,என்றேன்.அந்த!! ரூபாய்க்கு இரண்டு வாழைப்பழங்களில் இன்னொன்றைத் தின்றுகொண்டிருந்த சங்கரன், அதைத் தன் சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு, வாயைத் திறந்து சத்தமாகக் கத்தினான்.” போங்கண்ணே இது கூட எனக்குத் தெரியாதா? என்ற ஆதங்க முன்னுரையோடு, ஆனா…. ஆவன்னா.. . இனா ..ஈயன்னா..” என்று என்று வாயைப் பிளந்தான் சங்கரன்.
இது சங்கரன்குற்றமா?.அப்படித்தான் இந்த எழுத்துகள் நம் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டன. ஒலி வடிவில் வாயால் சொல்லும்போது பரவாயில்லை. ஓரளவு புரிகிறது.ஆனால் வரிவடிவில் இவற்றின் பெயர்களை எப்படி எழுதுவது? அதாவது அந்த எழுத்துகளுக்குப் பெயரிட்டு அவற்றை எப்படிச் சுட்டுவது?

ஒரு ஆளைச் சுட்டிக்காட்டி, இவன்தான் கண்ணன். இதோ இவள் மாலதி. இவர் மூக்கையா என்று பெயர் சொல்வதைப் போல.. இது ஆனா. இது ஆவன்னா. இது ஊனா. இது ஏயன்னா. இது ஓனா. இது அக்கன்னா. இது பையன்னா, இது மானா என்று சொல்ல வேண்டுமா? அல்லது அவற்றை வேறு முறையில் சுட்ட வழி விதிகள் எவையும் இருக்கின்றனவா?

தமிழ் எழுத்துகளை எப்படிச் சுடுவது? மேற்கண்ட ஆனா ஆவன்னா முறை தவறானது. சங்கரன் அதைவிட்டு நகர்ந்து தேறமாட்டான். ஆனா ஆவன்னா ஆனா உனா என்று சொன்னதெலலாம் அறியாத வயதில் நாம் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அன்று ஆசிரியர் கையாண்ட ஒரு உத்தி. ஆனால், தமிழ் எழுத்துக்களைச் சுட்ட அந்த எழுத்துகளின் பின்னே (எழுத்துகளுடன்) ஏதோ ஒன்றைச் சேர்க்க வேண்டும்… என்று படித்த இலக்கணம் தலையில் இடித்தது பிற்காலத்தில்தான்…

அகரம்… என்றால் ‘அ’. நாம் சொல்லும் ஆனா.
ஆகாரம்.. என்றால் ‘ஆ’.. நாம் சொல்லும் ஆவன்னா.
இகரம் என்றால….’இ’… நாம் சொல்லும் இனா..
ஈகாரம்‌‌.. என்றாள்’ ஈ’… நாம் சொல்லும் ஈயன்னா.

அது சரிண்ணே, ஐயன்னாவை!! எப்படிச் சுட்டுவது? என்று கேட்டான் நம்ம சங்கரன்.
(நம் என்பதுதான் பேச்சு வழக்கில் நம்ம) இவனை வைத்துக்கொண்டு இலக்கணம் படிப்பது…. துளைத்து எடுத்துவிடுவான். கேள்விகளை மடி நிறைய அள்ளிக கட்டி வைத்திருப்பான்.

‘ஐகரம்’ என்று சொல்லக்கூடாது.ஐகாரம் என்று சுட்டுவது ஓரளவிற்குச் சரிதான் என்றாலும் அதனை ‘ஐகான்’ என்று சொல்வதுதான் சாலச்சிறந்தது .
அதைப் போன்று ஔ என்னும் எழுத்தை ‘ஔகான்’ என்று சுட்ட வேண்டும். உயிரெழுத்துக்களில் இந்த இரு எழுத்துகளுக்கு மட்டும் கான் சேர்க்க வேண்டும். அவையே அவற்றைச் சுட்டும் பெயர்கள்.

அருகிலிருந்த சங்கரன் “அது எப்படி அண்ணே? அப்படின்னா அக்கனாவை(ஃ) எப்படிச் சொல்லுவீங்க?” என்று கேட்டான்.
“அடேய் சங்கரா, ஆயுத எழுத்தை அக்கனா என்று சொல்லக்கூடாது. அதனை ‘அஃகேனம்’ என்றோ ‘அஃகான்’ என்றோசுட்டவேண்டும்டா” .”போங்கண்ணே. இதை எப்படிண்ணே படிக்கிறது?” என்று கேட்டான் சங்கரன். “அடேய், அஃகேனம்” என்றேன். அவன் ‘அக்கனா’ என்றான். முறைத்துப் பார்த்தேன். “அண்ணே அக்கனாவை ‘அக்’ என்றும் சொல்லலாம்.’ அக்கனா’ என்றும் சொல்லலாம். நீங்க சொல்வது போலவும் சொல்லலாம்”.என்றான். இவனைத் திருத்த முடியாது.

க்… என்னும் மெய்யெழுத்துடன் ‘அ’ சேர்த்து பின்னர் ‘கரம்’ என்று சாரியைச் சேர்த்து ‘ககரம்’ என்று சுட்ட வேண்டும். அதாவது ‘அகரம்’ என்பதைச் சேர்க்க வேண்டும் (க்+அகரம்…ககரம்.) பதினெட்டு மெய்களுக்கும் இது பொருந்தும்.

உயிர்க்குறில் எழுத்துகளுக்குப் பின்னால் ‘கரம்’… உயிர் நெடில் எழுத்துகளுக்குப் பின்னால் ‘காரம்’ உயிர்மெய்க் குறில் எழுத்துக்களுக்குப் பின்னால் ‘கரம்’ சேர்த்து எழுதினால் அவைதான் அந்தந்த எழுத்துகளைச் சுட்டும் பெயர்கள் ஆகும்.

எ……எகரம்
ஊ….ஊகாரம்
த…….தகரம்
ந…….நகரம்

“அண்ணே.. காவன்னாவை… எப்படிச் சொல்லுறது?…காகரம் என்றா? அல்லது காகாரம் என்று சொல்ல வேண்டுமா?.” இரண்டும் தவறு.. ஏனெனில் உயிர்மெய் நெடில் எழுத்துகள் சாரியை எவற்றையும் ஏற்பதில்லை. உயிர்மெய் நெடிலை அப்படியே சொன்னால் போதும்.

“கா,சீ,தோ,றே…. இப்படியே சொல்லு இப்படியே எழுது”. அண்ணே. இப்போ சொன்னீங்களே சாரியை.அது என்ன அண்ணே”

“எழுத்துகளைச் சுட்ட அவற்றின் பின்னால் அல்லது அவற்றோடு நாம் சேர்க்கும் கரம், காரம், கான், கேனம், (அ)கரம் இவற்றை எழுத்துச் சாரியைகள் என்று சொல்லவேண்டும்டா சங்கரா”.

“சும்மா இருங்க அண்ணே. அப்படின்னா உங்க கணக்குப்படி, தூ என்னும் எழுத்தை எப்படிச் சொல்வது?” என்று கேட்ட சங்கரன் ஒரு மாதிரி பார்த்தான்.
“தகர ஊகாரம் என்று சொல்லவேண்டும் டா..மண்டையா”. என்று சொன்னேன். தகரத்தோடு ஊகாரம் புணர்ந்தால் ‘தூ’ பிறக்கும். எனவே அது, தகர ஊகாரம் எனப்படும். சங்கரனுக்கு புரிந்ததோ இல்லையோ தலையைச் சொறிந்து கொண்டு பல்லைக் காட்டினான்.

எங்கள் தமிழாசிரியர் வகுப்பில் பாடம் கவனிக்காமல் ஏதோ விளையாடிக் கொண்டிருப்பவனை அக்காலத்தில் கேலியாகத் திட்டும்போது புரியவில்லை..

“ஏண்டா பேசாதே பேசாதே என்று சொல்கிறேன். நீ பேசிக் கொண்டே இருக்கிறாய். சொன்னால் கேட்க மாட்டாயா? சோற்றைத்தான் தின்கிறாயா? அல்லது பகர ஈகாரத்தைத் தின்கிறாயா? என்று கேட்பார்.
இந்தக் கேள்வியைச் சங்கரனை பார்த்து கேட்டால், ஒருவேளை “ஆமாம் அண்ணே” என்று சொன்னாலும் சொல்லுவான். சங்கரன் தூங்கிவிட்டான்.. அவன் எழுந்து அடுத்த கேள்வி கேட்பதற்குள் மணி அடித்துவிட்டது. இலக்கணப் பாடத்தை முடித்து விடுவோம். என்னது நீங்களும் தூங்கிட்டீங்களா??ஐயையோ..

தமிழ் முத்துமணி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.