May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா

1 min read

Karnataka Chief Minister Eduyurappa resigns

26-7-2021
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளித்தார்.

எடியூரப்பா

கர்நாடகாவில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி எடியூரப்பா 4வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜ.,வில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்வர் பதவியை பா.ஜ., மேலிடம் வழங்கியது. ‘அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்ற எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று இன்றுடன் (ஜூலை 26) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ராஜினாமா

கடந்த 16ம் தேதி டில்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது 2 ஆண்டுகள் நிறைவடைவதால் நிபந்தனைப்படி முதல்வர் பதவியை விட்டு விலகுமாறு கேட்டுக்கொண்டனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பாவும் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் எடியூரப்பாவின் 2 ஆண்டு சாதனையை கொண்டாடும் விதமாக, நிகழ்ச்சி ஒன்றுக்கு பெங்களூருவில் கர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொண்ட எடியூரப்பா, ‘என்னை 7 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி. நான் கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்றுக் கொள்வேன். கட்சி மேலிடத்தின் முடிவை மீற மாட்டேன். எனக்கு எந்த குறையும் இல்லை. எனக்கு ஆதரவாக மடாதிபதிகள் மாநாடு நடத்துவது அவசியமற்றது. இன்று பிற்பகலில் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன்’ எனக் கண்ணீர் மல்கப் பேசினார்.

கவர்னரிடம் கடிதம்

இதையடுத்து, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை எடியூரப்பா அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட கவர்னர் அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை இடைக்கால முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
அதன்பின், எடியூரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

என்னை ராஜினாமா செய்யுமாறு யாரும் நிர்பந்திக்கவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பே பதவியில் இருந்து விலக முடிவு செய்தேன். அதன்படி விலகுகிறேன். எனது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக கவர்னர் தெரிவித்தார். எனக்கு பிறகு யார் முதல்வர் பதவி ஏற்கக்கூடும் என்பது பற்றி எனக்கு தெரியாது. அதேசமயம் அடுத்த தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்வது மட்டுமே எனது இலக்கு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.