May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு; மத்திய அரசு முடிவு

1 min read

OBC in medical courses. 27 per cent reservation per section; Federal Government decision

29.7.2021
மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவினருக்கு நடப்பு நிதியாண்டில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இட ஒதுக்கீடு

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.), இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதி மன்றம், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதி மன்றம் இதனை செயல்படுத்த உத்தரவிட்டது.
இந்த சூழ்நிலையில், உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஒன்றிய அரசு அமல்படுத்தவில்லை. இதனால் ஒன்றிய அரசு மீது திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என்று அதில் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

27 சதவீதம்

இந்த நிலையில், அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 2020 -21 கல்வி ஆண்டில் (நடப்பு கல்வியாண்டிலேயே) மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 1,500 மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளில் பயன்பெறுவர் என்றும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் ஆண்டுக்கு சுமார் 2,500 மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.