புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை
1 min readThe terrorist who acted as the mastermind of the Pulwama attack was shot dead
31.7.2021
புல்வாமாவில் கடந்த 2019ம் ஆண்டில் 40 வீரர்கள் வீரமரணம் அடைய காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி, இன்று (ஜூலை 31) நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
பயங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தசிகம் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு, பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடி கொடுத்தனர். இதில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புல்வாமாக தாக்குதல்
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை ஆய்வு செய்த போது, ஒருவன் முகமது இஸ்மாயில் ஆல்வி என தெரியவந்தது. பாகிஸ்தானை சேர்ந்த இவன், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் உறவினர் என்பது தெரியவந்தது. அவனுக்கு லம்போ மற்றும் அத்னன் என்ற பெயர்களும் உண்டு.
கடந்த 2019ம் ஆண்டு, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் முகமது இஸ்மாயில் ஆல்வி, சதித்திட்டத்தை தீட்டியதும், மூளையாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. அந்த தாக்குதல் தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முகமது இஸ்மாயில் ஆல்வி பெயர் இடம்பெற்றுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதியின் அடையாளத்தை கண்டறியும் பணி நடந்து வருகிறது.
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.