காதல் விவகாரத்தில் பெண் டாக்டரை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை
1 min readYoung man commits suicide by shooting female doctor in love affair
31.7.2021
கேரளாவில் காதல் விவகாரத்தில் பெண் டாக்டரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கேரளாவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பயிற்சி டாக்டர்
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மாதவன் மகள் பி.வி.மானசா (வயது 24). இவர் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பி.டி.எஸ். படித்து முடித்தார். பின்னர் கல்லூரி அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார்.
அந்த வீட்டில் வேறு சில பயிற்சி டாக்டர்களும் தங்கியிருந்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் மானசா சக டாக்டர்களுடன் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராகில் என்ற வாலிபர் வீட்டிற்குள் வந்தார்.
சுட்டுக் கொலை
அவர் மானசாவின் கையை பிடித்து ஒரு அறைக்குள் இழுத்து சென்று பூட்டிக் கொண்டார். இதை பார்த்த சக டாக்டர்கள் கூச்சலிட்டனர்.
அறைக்குள் சென்றதும் வாலிபர் ராகில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மானசாவை சரமாரியாக சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். தொடர்ந்து அந்த வாலிபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் சக டாக்டர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காதல் விவகாரம்
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மானசாவுக்கும், வாலிபர் ராகிலுக்கும் காதலித்து வந்ததாகவும், பின்னர் அந்த வாலிபரின் நடத்தை சரியில்லையென தெரிந்ததும் அவர் விலகி சென்றதாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து மானசாவிடம், ராகில் தகராறு செய்துள்ளார். இதுதொடர்பாக மானசாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்தநிலையில் மானசாவை, ராகில் கொன்று விட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து எர்ணாகுளம் ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.