October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் இணைகிறார் பிரசாந்த் கிஷோர்?

1 min read

Prasanth Kishore joins Congress?

31/7/2021

2022-ம் ஆண்டு 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையடுத்து, தேர்தல் பிரச்சார வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் அதிகமாக நெருக்கம்காட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியில் விரைவில் அவர் இணைவதற்கான சூழல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இதற்குமுன் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார்.
அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்த கட்சியின் துணைத் தலைவராகினார்.
ஆனால், கட்சியின் தலைவரும் பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் விலகினார்.

காங்கிரஸ்

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் தேர்தல் முடிந்தபின் தன்னுடைய நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின.

அதற்கு ஏற்றார்போல் கடந்த மாதம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், மாநில அரசின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்தார். இதனால், காங்கிரஸ் கட்சியோடு பிரசாந்த் கிஷோர் நெருக்கம் காட்டுவது அதிகரித்தது.

5 மாநில தேர்தல்

2022 ஆம் ஆண்டு கோவா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. அதிலும் உத்தரப் பிரதேச மாநிலத்தை 2-வது முறையாகக் கைப்பற்ற பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது, சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன் சமாஜும் வியூகம் வகுத்து வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் செய்து பணியாற்றி வருகிறார், மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு பிரியங்கா காந்தி களத்தில் பம்பரமாகச் சுழல்கிறார்.

மூன்று முறை

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டிவரும் பிரசாந்த் கிஷோர் கடந்த வாரத்தில் மட்டும் ராகுல் காந்தியை அவரின் இல்லத்தில் 3 முறை சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது,காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

இந்த சந்திப்பின் விவரம் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்ற போதிலும், காங்கிரஸ் கட்சிக்குள் பிரசாந்த் கிஷோரை சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்புக்குப்பின் பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணையும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன்னிச்சையாக..

ஆனால், பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைப்பது குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. சில தலைவர்கள் கூறுகையில் “பிரசாந்த் கிஷோர் கர்வம் பிடித்தவர். கடந்த 2017-ம் ஆண்டு கிஷோர் தலைமையில் சென்றுதான் காங்கிரஸ் தோற்றது. ராகுல் காந்தியின் விவசாயிகள் பேரணிக்குப்பின் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல மரியாதை உ.பியில் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் பேரம் பேசியது தோல்விக்கு இட்டுச் சென்றது. கிஷோர் செயல்படும்விதம் தன்னிச்சையாக இருக்கும்”எனத் தெரிவிக்கின்றனர்.

சில தலைவர்கள் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைப்பதால், கட்சி வலிமை அடையும் என்று தெரிவித்தாலும், கட்சியின் முழுமையான முடிவுகள் கிஷோர் கையில் சென்றுவிடக்கூடாது. ராகுல் காந்திதான் இறுதி முடிவு எடுப்பவராக இருக்க வேண்டும். கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு வருவதில் தவறில்லை என்று தெரிவிக்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.