May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு புளியரையில் கொரோனா பரிசோதனை தீவிரம்

1 min read

Intensity of corona testing in puliyara for those coming from Kerala

28.8.2021
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் அங்கிருந்து வருபவர்களுக்கு புளியரை சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கேரளாவில் கொரோனா

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக- கேரள எல்லையான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

அங்கு சுகாதார துறையினரும் சோதனைச்சாவடி அமைத்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களிடம், கடந்த 3 நாட்களுக்குள் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் அல்லது இரு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.

வருகை குறைந்தது

மேலும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இந்தநிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதற்கிடையே சுகாதார நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் அங்கு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக எல்லையோர சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்று அல்லது இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று உள்ளவர்களை மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கிறோம்.

அவசர காரணங்களுக்காக தமிழகத்துக்கு வருகிறவர்களிடம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி அவர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள சுகாதார துறையினருக்கு அனுப்பி வைக்கிறோம்.

மேலும் அவர்களை சம்பந்தப்பட்ட பகுதியிலேயே தனிமைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தீவிர பரிசோதனை காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.