April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

கோவில்களில் திருக்குறள் வகுப்புகள்; தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை-சட்டசபையில் அறிவிப்பு

1 min read

Screw classes in temples; Texts of Tamil Scholars Announcement in the Nationality-Assembly

31.8.2021

திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும் என்றும், அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அறிவிப்பு

சட்டப்பேரவையில் இன்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

  1. ‘தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில், ஊடகங்கள் வாயிலாக தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்கென சிறப்பு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ் பரப்புரைக் கழகம்

  1. அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க ‘தமிழ் பரப்புரைக் கழகம்’ உருவாக்கப்படும். இதற்கெனத் தொடர் செலவினமாக ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  2. பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ‘திறனறித் தேர்வு’ நடத்தி ஆண்டுதோறும் 1,500 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டாண்டுகளுக்கு ஊக்கத் தொகையாக மாதம்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும்.
  3. திருக்குறள் முற்றோதல் செய்து பரிசுத் தொகை வழங்காமல் நிலுவையில் உள்ள 219 மாணவர்களுக்கு இந்த ஆண்டு குறள் பரிசு வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மாணவர்கள் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டு, பரிசுத் தொகை உயர்த்தப்படும்.

நாட்டுமை

  1. தமிழ் அறிஞர்களை சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் தொ.பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம் மற்றும் புலவர் செ.ராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு, பரிவுத் தொகை வழங்கப்படும்.
  2. சங்க இலக்கிய வாழ்வியல், ஓவியங்களாகவும், எளிய விளக்கத்துடனும் காஃபி மேசைப் புத்தகமாக வெளியிடப்படும். இதற்கென ரூபாய் 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

கோவில்களில் திருக்குறள்

  1. திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்.
  2. தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளன்று இலக்கியக் கூட்டங்கள் நடத்திட ரூபாய் 15 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
  3. புகழ்பெற்ற தலைவர்கள், தமிழறிஞர்களின் ஒலி/ ஒளிப்பொழிவுகள் ஆவணமாக்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  4. சங்க இலக்கியங்கள் சந்தி பிரிக்கப்பட்டு நூல்களாக அச்சிட்டுக் குறைந்த விலையில் வெளியிட ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  5. தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்.
  6. வணிக நிறுவனங்களில் வழங்கப்படும் பற்றுச் சீட்டுகள் தமிழிலும் அச்சிட்டு வழங்கப்படவும், குடியிருப்பு அடுக்ககங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குத் தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படவும் வழிமுறைகள் உருவாக்கப்படும்.
  7. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பெறப்பட்ட முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுத் தொகுப்புகள் தமிழில் தொகுத்துத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் வயிலாக இணையத்தில் வெளியிடப்படும்.
  8. பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் ஒலி நூல்களாக வெளியிட ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.
  9. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் கீழ், புதிய கலைச்சொற்கள் உருவாக்கம் இணைய வழியில் அறிமுகம். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்.
  10. தொல்காப்பியம் முதல் முத்தொள்ளாயிரம் வரையிலான 41 செவ்வியல் நூல்கள் எளிதாகவும் ஒரே இடத்தில் தொகுப்பாகவும் கிடைக்கப் பெற வழிவகை செய்யப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.
  11. நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூபாய் 81 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படும்.

பன்மொழி அகராதி

  1. தமிழைப் பிறமொழியினருக்குக் கற்பிக்கும் வகையில் திராவிட மொழிகள் உட்பட பிற மொழிகளில் பாட நூல்களும், பன்மொழி அகராதியுடன் தமிழ் கற்பிக்கும் குறுஞ் செயலிகளும் உருவாக்கப்படும்.
  2. சொற்குவையின் சொற்கள், தமிழ் மின் நூல்கள், அரசுத் தளங்களின் உள்ளடக்கங்கள் போன்றவை படைப்பாக்கப் பொது உரிமத்தில் வெளியிடப்படும்.
  3. ஆட்சிச் சொல் அகராதி திருத்திய பதிப்பு மற்றும் அரசுத் துறைகளின் புதிய கலைச்சொற்கள் தொகுத்து வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.