40 மாடி குடியிருப்பை இடித்து தள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min read
Supreme Court orders demolition of 40-storey apartment building
31.8.2021-
டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரங்களை கொண்ட 40 மாடி கட்டடத்தை இடித்துத் தள்ள சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது.
40 மாடி கட்டிடம்
டெல்லியின் புறநகர் பகுதியான உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான சூப்பர்டெக் 40 மாடிகளை கொண்ட இரட்டை கோபுரங்களில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டியது.
இதில் 900 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கட்டுமான விதிமுறைகளை மீறி போதிய இடைவெளியின்றி இந்த கட்டடம் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகவும், அதனை இடிக்க வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். கட்டடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்த நீதிபதிகள் அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்தனர். அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
புனிதமற்ற உறவு
இந்த கட்டிடம் கட்டப்பட்ட விவகாரத்தில் நொய்டா வீட்டுவசதி துறை அதிகாரிகளுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் இடையே புனிதமற்ற உறவு நிலவுகிறது.
அதிகாரிகளுக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையே நிலவும் கூட்டணியால் பாதிக்கப்படுவது சாதாரண மக்களே. இந்த மோசமான கட்டிடம் கட்டப்பட்டதற்கு நொய்டா அதிகாரிகளும் உடந்தை.
கட்டிடத் திட்டங்களை வீடு வாங்கும் மக்களுக்கு தெரியாமல் மறைப்பது பெரும் குற்றமாகும். அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் பரவலாக அதிகரித்து வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றி கவலையில்லை.
இந்த கட்டுமானம் பாதுகாப்பு தரங்களை நீர்த்துப்போகச் செய்கிறது. கட்டுமான விஷயங்களில் சட்டம் கண்டிப்பாக கையாளப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி தகுதியற்ற இடத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இடிக்க உத்தரவு
சூப்பர்டெக் நிறுவனம் சட்டவிரோதமாக எதுவும் செய்ய வில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த கட்டிடம் இரண்டு மாத காலத்திற்குள் இடிக்கப்பட வேண்டும், மேலும் சூப்பர் டெக் தனது சொந்த செலவில் இதனை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கிய ஒவ்வொரு உரிமையாளருக்கும் அவர்கள் செலுத்திய தொகையை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து சூப்படர் டெக் நிறுவனம் திருப்பிச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.