May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகுவலியை தவிர்ப்பது எப்படி?

1 min read

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு வரும் முதுகுவலியை தவிர்ப்பது எப்படி?

How to avoid back pain that comes to those who work?

அலுவலக பணியாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பணி செய்வதால் முதுகுவலி பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் இருந்து அலுவலக பணியை தொடரும் சூழலில் கூடுதல் நேரம் கணினி, லேப்டாப் முன்பு அமருவதால் உடல் இயக்கம் குறைந்து விட்டது.

காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும்போது உடல் இயக்க செயல்பாடுகள் ஓரளவுக்கு நடைமுறையில் இருக்கும். ஆனால் வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலையை தொடர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு உடல் இயக்க செயல்பாடுகளில் தொய்வு ஏற்படுவதால் முதுகுவலி பிரச்சினை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்வதுதான் அதற்கு காரணம். முதுகுவலியை தவிர்ப்பதற்கு சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.

நீங்கள் அமரும் நாற்காலி முதுகு பகுதியை நேராகவும், சவுகரியமாகவும் வைத்திருப்பதற்கு ஏற்றதாக அமைந்திருக்க வேண்டும். முதுகுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் நாற்காலியின் அமைப்பு அமைந்துவிடக்கூடாது. லேப்டாப் பயன்படுத்தி வேலை செய்பவர்கள் ‘பீன் பேக்’ எனப்படும் சொகுசு பை மீது அமர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அப்படி அமர்ந்து வேலை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அலுவலக பணிக்கு என்றே பொருத்தமாக வடிவமைக்கப்படும் நாற்காலிகளை தேர்வு செய்து கொள்வதுதான் சிறந்தது. உடலுக்கும் பாதுகாப்பானது.

முதுகுவலிக்கு மற்றொரு காரணமாக அமைந்திருப்பது உட்காரும் தோரணைதான். சரியான தோரணையில் அமர்ந்திருக்காவிட்டால் முதுகுவலி மட்டுமல்ல வேறு சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். நல்ல உடல் தோரணை என்பது தரையில் கால்கள் அழுத்திய நிலையில் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இடுப்பு பகுதி நாற்காலியின் உள்புற பகுதியில் ஒட்டிய நிலையில் இருக்க வேண்டும். கணினியானது உங்கள் தோள்பட்டை மட்டத்திற்கு சற்று உயரமாக அமைந்திருக்க வேண்டும். நேராக நிமிர்ந்த நிலையில் அமர்ந்து பணி செய்ய வேண்டும்.

கணினியின் திரைக்கும், கண்களுக்கும் இடையே குறைந்த பட்சம் ஒரு அடி தூரமாவது இடைவெளி இருக்க வேண்டும். கணினியின் மேல் பகுதியும் கண் மட்டத்திற்கு இணையாக இருக்க வேண்டும். கணினி திரை இடைவெளி, கண் மட்டம் போன்றவற்றை சரியாக கடைப்பிடிக்காவிட்டால் கழுத்துவலியையும் அனுபவிக்க நேரிடும். பணிக்கு இடையே சிறிது நேரம் இடைவெளி எடுத்து சில நிமிடங்கள் நடப்பது, செடி, கொடிகள், மரங்கள் போன்ற இயற்கையை ரசிப்பது மனம், கண்கள் மற்றும் உடலுக்கு தேவையான ஓய்வு கொடுக்க உதவும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.