May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

டெபிட் கார்டின் பின் நம்பரை மட்டும் வைத்து பணத்தைத் திருட முடியுமா?

1 min read


Is it possible to steal money with a debit card PIN number?

நாம் தினசரி வாழ்வில் ஏடிஎம் பயன்பாடு என்பது சாதாரணமாகி விட்டாலும் கூட இன்னும் ஏடிஎம்மில் பணப் பரிவர்த்தனையை முடித்தவுடன் ‘Cancel’ பொத்தானைப் பலமுறை அமுக்கி விட்டுத்தான் வெளியே வருவோம். ஏடிஎம் மூலம் நம் பணத்தைத் திருடிவிட முடியும் என்ற பயம்தான் இதற்கு முக்கியக் காரணம். ஏடிஎம் கார்டின் பின் நம்பரை வைத்து மற்றவர்கள் நம் பணத்தைத் திருட முடியுமா என்ற சந்தேகம் நம் வாசகர் ஒருவருக்கு எழுந்திருக்கிறது.

முதலில் நம் டெபிட் கார்டு தகவல்களை வைத்து நம் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தைத் திருட வேண்டும் என்றால் என்னென்ன தகவல்கள் தேவை என்பதைப் பார்ப்போம். நம் வங்கிக் கணக்கில் இருந்து ஒருவர் டெபிட் கார்டு தகவல்களைக் கொண்டு பணத்தைத் திருட நினைக்கிறார் என்றால், அதற்கு நம்முடைய பெயர், டெபிட் கார்டு எண், டெபிட் கார்டு காலாவதியாகும் தேதி, டெபிட் கார்டின் பின் நம்பர் மற்றும் டெபிட் கார்டின் பின்னால் இருக்கும் சிவிவி எண் ஆகிய தகவல்கள் தேவை. இவை அனைத்தும் இருந்தாலும் கூட ஒரு பணப்பரிவர்த்தனை செய்வதற்கு OTP எனப்படும் One Time Password தேவைப்படும். அது நம்முடைய மொபைல் எண்ணுக்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோதான் வரும். எனவே, டெபிட் கார்டு தகவல்களை வைத்துப் பணத்தைத் திருடுவது அவ்வளவு சுலபம் கிடையாது. மேற்கூறிய அனைத்து தகவல்களையும் ஏதாவது ஒரு வழியில் பெற்றுவிட்டாலும் கூட நம் டெபிட் கார்டின் பின்புறம் இருக்கும் சிவிவி எண்ணானது நம் கார்டின் பின்புறத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்காது.

வேறு ஏதாவது வழியில் பணத்தைத் திருட நம் டெபிட் கார்டு பின் நம்பர் உதவுமா? உதவும், நம் டெபிட் கார்டு திருடு போனால், நம் டெபிட் கார்டை திருடிய நபருக்கு அதன் பின் நம்பரும் தெரிந்திருந்தால் அதன் மூலம் நம் வங்கிக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எளிதாக மூலம் எடுக்க முடியும். ‘ஸ்கிம்மிங்’ எனப்படும் மற்றொரு முறையிலும் நம் டெபிட் கார்டு மூலம் பணத்தைத் திருட முடியும். இந்த முறையில் ஏடிஎம்களில் நாம் பணம் எடுக்கும் போது ஸ்கிம்மிர் என்னும் சாதனத்தைக் கொண்டு கார்டின் பின்பக்கம் இருக்கும் மேக்னடிக் ஸ்ட்ரிப் (Magnetic Stripe) மூலம் நம் டெபிட் கார்டின் தகவல்களைத் திருடி விடுவார்கள். சிறிய கேமராவைக் கொண்டு நம் பின் நம்பரையும் தெரிந்து கொள்வார்கள். பின்னர், நம்முடைய டெபிட் கார்டு தகவல்களை வைத்து போலியான கார்டை உருவாக்கி அதனைக் கொண்டு நம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடும் வாய்ப்புகள் இருந்தன.

தற்போது இந்த முறையில் பணத்தைத் திருட முடியாதா எனக் கேட்டால்… ஆம், இந்த முறை மூலம் நம் டெபிட் கார்டு தகவல்களை வைத்து பணத்தைத் திருடும் வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது வழங்கப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் மேக்னடிக் ஸ்ட்ரிப்புடன் இவிஎம் சிப்பும் (EVM Chip) பொருத்தப் பட்டிருக்கும். நம் டெபிட் கார்டு தகவல்கள் எல்லாம் இந்த இவிஎம் சிப்பிலேயே சேமித்து வைக்கப் பட்டிருக்கும். மேக்னடிக் ஸ்ட்ரிப் போல் இல்லாமல் இந்த இவிஎம் சிப்பில் சேமித்து வைக்கப்படும் தகவல்கள் என்கிரிப்ட் செய்யப் பட்டிருக்கும். எனவே, ஸ்கிம்மிங் மற்றும் க்ளோனிங் முறையில் நம் கார்டை போல மற்றொரு போலியான கார்டை நம் கார்டின் தகவல்களை வைத்து உருவாக்க பணத்தைத் திருட முடியாது.

இனி வரும் காலத்தில் மேகன்டிக் ஸ்ட்ரிப் இல்லாமல், இவிஎம் சிப் மட்டுமே கொண்ட கார்டுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

பாதுகாப்பாக இருப்பதற்கு சில வழிகள்:

நம்முடைய பாதுகாப்பை நாம் உறுதி செய்து கொள்வது எப்போதும் சிறந்தது. நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடுபோகாமல் இருக்க சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும்.

இணையத்தில் தேவையில்லாத, நம்பகத்தன்மையில்லாத லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

இணையத்தில் நம்பகத்தன்மை இல்லாத தளங்களில் நம்முடைய டெபிட் கார்டு அல்லது வங்கித் தகவல்களைக் கொடுக்க வேண்டாம்.

உங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தொலைந்து போனால் உடனடியாக வங்கியை அழைத்து அந்த கார்டை முடக்க வேண்டும்.

அவ்வப்போது வங்கிப் பரிவர்த்தனைகளைச் சோதனை செய்வது அவசியம். அனைத்து பரிவர்த்தனைகளையும் நாம்தான் செய்திருக்கிறோமா என்று சோதனை செய்ய வேண்டும். வேறு ஏதாவது பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்றால் உடனடியாக வங்கியை அணுகி விசாரிப்பது நல்லது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.