May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

வங்கிக் கணக்கே இல்லாத கூலித் தொழிலாளி பெயரில் ரூ.9.99 கோடி டெபாசிட்

1 min read

9.99 crore deposit in the name of a mercenary who does not have a bank account

24.9.2021

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு வங்கிக் கணக்கே இல்லாத நிலையில், அவரின் ஆதார் கார்டைப் பயன்படுத்தி கணக்கு தொடங்கி ரூ.9.90 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கூலித் தொழிலாளி

பீகாரில் சாமானிய மக்களின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுப் பரிமாற்றம் செய்யப்படுவதும், கண்டுபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

பிஹாரின் சபுவால் நகரம் அருகே சிசானி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விபின் சவுகான். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இணைவதற்காக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் சென்று கணக்குத் தொடங்க விரும்பினார்.

அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகானின் ஆதார் எண்ணைப் பதிவு செய்து வங்கிக் கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருப்பதாகத் தெரியவந்தது.

9.99 கோடி ரூபாய்

அந்த வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பார்த்த சேவை மைய அலுவலருக்கு அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது.
100 நாள் வேலை திட்டத்தில் சேரவந்த கூலித் தொழிலாளி பெயரில் வங்கிக் கணக்கில் ரூ.9.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டு திகைத்தார். அதுமட்டுமல்லாமல் விபின் சவுகானுக்கு இதுவரை வங்கிக் கணக்கே கிடையாது.
முதல் முறையாக வங்கிக் கணக்கு தொடங்க விரும்பியபோது, அவருக்கே தெரியாமல் அவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதில் ரூ.9.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டு சவுகானும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சவுகான் நடந்த விவரங்களைத் தெரிவித்தார். வங்கி அதிகாரிகளும் சவுகான் கணக்கை ஆய்வு செய்தபோது அதில் ரூ.9.99 கோடி இருப்பது கண்டு திடுக்கிட்டனர்.

பணபரிமாற்றம்

சவுகான் பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரை கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. ஆனால், சவுகான் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை, கையொப்பம் என எதுவுமே இல்லை. ஆதார் கார்டு எண் மட்டுமே அவருடையதாக இருந்தது. தற்போது சவுகான் வங்கிக் கணக்கில் ரூ.9.99 கோடி பணம் இருப்பில் இருக்கிறது.

சவுகான் பெயரில் கணக்கு தொடங்கப்பட்ட விண்ணப்பத்தை வங்கி அதிகாரிகள் தேடிப் பார்த்தபோது அது கிடைக்கவில்லை.

விசாரணைக்கு உத்தரவு

வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சவுகான் அளித்த தகவல் உண்மையானது எனத் தெரிந்தவுடன் வங்கிக் கணக்கை முடக்கவிட்டோம். இது தொடர்பாக வங்கி அதிகாரிகளுக்குள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த வங்கிக் கணக்கிலிருந்து எந்த வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

மாணவர்

பீகாரில் இதுபோன்று கோடிக்கணக்கில் அடையாளம் தெரியாதவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுவது புதிதல்ல. முசாபர்பூர் மாவட்டம், கட்டாரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிங்காரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராம் பகதூர் ஷா வங்கிக் கணக்கில் ரூ.52 கோடி டெபாசிட் செய்யப்பட்டது.

கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த பஹகுரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாஸ்தியா கிராமத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் இரு பள்ளி மாணவர்கள் உத்தர் பிஹார் கிராம வங்கியில் கணக்கு வைத்திருந்தனர்.

இவர் வங்கிக் கணக்கிலும் இதுபோன்று கடந்த 15-ம் தேதி கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. ஒரு மாணவர் வங்கிக் கணக்கில் ரூ.6.20 கோடியும், மற்றொரு மாணவர் வங்கிக் கணக்கில் ரூ.90 கோடியும் கடந்த 15-ம் தேதி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

சமீபத்தில் பீகாரைச் சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவர் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.5.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது. அந்தப் பணத்தைத் திருப்பித் தருமாறு வங்கி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால், அந்தப் பணத்தைத் தரமறுத்த ரஞ்சித் தாஸ், தேர்தலின்போது பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தபடி ரூ.15 லட்சத்தில் ரூ.5.50 லட்சம் முதல் கட்டமாக டெபாசிட் செய்துள்ளார் எனக் கூறி பணத்தைத் தரமறுத்தார். அதன்பின் வங்கி அதிகாரிகள் போலீஸில் புகார் செய்து, ரஞ்சித் தாஸைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.