May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

சிறுமியை பலாத்காரம் செய்த அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை உறுதி

1 min read

Life sentence for priest who raped girl

24.9.2021

கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கோவில் அர்ச்சகருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

கோவில் அர்ச்சகர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவில் அர்ச்சகர் மது நாராயணன். சில ஆண்டுகளுக்கு முன் சாலையில் ஆதரவற்று இருந்த ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி தனது வீட்டில் தங்கவைத்தார்.
இதில் அந்தக் குழந்தைகளின் தாயாருக்கு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. தனது வீட்டில் தங்கவைத்தபின் அந்தக் குழந்தைகளில் ஒருவரை அந்த அர்ச்சகர் தொடர்ந்து ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

வழக்குப்பதிவு

இந்நிலையில் ஒருநாள் மலப்புரம் போலீசாரின் மகளிர் பிரிவுக்கு வந்த அழைப்பில் ஒரு பெண்ணும், 3 குழந்தைகளும் ஆதரவற்று சாலையில் இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, போலீசார் அந்தப் பெண்ணையும், அந்த 3 குழந்தைகளையும் அழைத்துச் சென்று காப்பகத்தில் தங்க வைத்தனர். அப்போது அந்த 3 குழந்தைகளையும் பரிசோதனை செய்தபோது, அதில் ஒரு குழந்தை தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மலப்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்தக் குற்றத்தில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகர் மது நாராயணன் என்பவரைக் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், போக்ஸோ சட்டம் மற்றும் ஐபிசி 376 (1) பிரிவின் கீழ் மது நாராயணனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மது நாராயணன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், ஜியாத் ரஹ்மான் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து, விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர். ஆனால், அர்ச்சகர் மது நாராயணன் மீதான போக்ஸோ சட்டத்தில் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து, ஐபிசி 376 பிரிவில் பலாத்காரக் குற்றத்தை மட்டும் உறுதி செய்தனர்.

தீர்ப்பு விவரம்

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தை பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல் இருந்ததால், அவருடைய வயது நிரூபிக்கப்படவில்லை. ஆனால், அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. ஓராண்டாக அந்தச் சிறுமியை அர்ச்சகர் பலாத்காரம் செய்துள்ளார்.

பருந்து கூட்டங்கள்

ஒரு ஆண், கட்டிய மனைவியையும், குழந்தைகளையும் ஆதரவின்றி விட்டுவிட்டாலே, அவர்களைத் கொத்திச் செல்ல பருந்துக் கூட்டங்கள் காத்திருக்கும். இதில் ஆதரவற்ற பெண்களை மட்டுமல்ல, குழந்தைகளையும் அந்தப் பருந்துகள் கொத்திச் செல்லும்.

இந்த வழக்கில் கோவில் அர்ச்சகர் ஆதரவற்ற பெண்ணையும், அவரின் 3 குழந்தைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தொடர்ந்து அதில் வயதில் மூத்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த பலாத்காரத்தை மற்ற குழந்தைகள் முன்னிலையிலேயே செய்துள்ளார்.

ஒரு குழந்தையை பலாத்காரம் செய்த ஒரு அர்ச்சகரின் பூஜைகளையும், வழிபாட்டையும் எந்தக் கடவுள் ஏற்றுக்கொள்வார். அவரைக் கடவுளுக்கும் பக்தருக்கும் இடையிலான ஊடகமாகக் கருத முடியுமா என்பது வியப்பாக இருக்கிறது.

அந்தக் குழந்தைகளின் தாயைத் தெரியாது என்று குற்றம் சாட்டப்பட்ட அர்ச்சகர் கூறுகிறார். ஆனால், பல மாதங்களாக அவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் அந்தப் பெண்ணையும், குழந்தைகளையும் வைத்திருந்தார் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அந்தத் தாயின் மனநிலை இவ்வாறு இருப்பது சமூகத்துக்கே வெட்கக்கேடு.

மனநிலை

மூன்று குழந்தைகளுடன் கைவிடப்பட்டது மற்றும் உணவு அல்லது தங்குமிடம் இல்லாததால் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் புரிந்துகொள்ளக் கூடியதுதான். குழந்தைகள் தனித்து விடப்பட்டதால்தான், உடல், மன மற்றும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் எந்தத் தாயும் சரியான மனநிலையில் இருப்பார் என நினைக்க முடியாது. ஆதலால், குற்றம் சாட்டப்பட்ட அர்ச்சகர் நாராயணன் மீதான போக்ஸோ வழக்கு ரத்து செய்யப்பட்டாலும் பாலியல் பலாத்கார வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அவரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.