May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

கடலூர் முருகேசன்-கண்ணகி தம்பதி ஆணவக்கொலை ஒருவருக்கு தூக்கு; நடவடிக்கை் எடுக்காத போலீசார் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை

1 min read

Cuddalore Murugesan-Kannaki couple hanged for manslaughter; 12 sentenced to life imprisonment

24.9.2021

கடலூர் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர். இந்த ஆணவக்கொலை சம்பவத்தில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

காதல் திருமணம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (வயது 25). தலித் சமுதாயத்தைச்சேர்ந்த இவர், பி.இ. (கெமிக்கல்) பட்டதாரியாவார். இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவரை காதலித்து வந்தார்.

இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர், ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவந்தது.

கொலை

இதனை அடுத்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர். பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் போலீசில் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டனராம். இதனையடுத்து சில நாள்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது.

4 பேர் கைது

அதன்பின்னர் விருத்தாசலம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன், கண்ணகி ஆகியோர் சாதி மாறி திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர்.

ஆனால் இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டது என்றும், எனவே, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு 2004-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில், அப்போதைய விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ப.தனபால் இன்று தீர்ப்பு அளித்துள்ளார்.

தூக்குதண்டனை

அதில் கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒருவருக்கு தூக்கு தண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

முருகேசன் சித்தப்பா அய்யாசாமி, குணசேகரன் ஆகியோர் விடுதலை செய்யபட்டனர்.

இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப் இன்ஸ்பெகடர் தமிழ்மாறன் ஆகியோர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

கண்ணகியின் சகோதரர் மருது பாண்டிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.