May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

வெள்ளை மாளிகையில் ஜோ பைடனை மோடி சந்தித்தார்

1 min read

Modi met Joe Biden at the White House

24-.9.2021
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திரமோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். வரலாற்று சிறப்பு மிக்கதாக இந்த சந்திப்பு இன்று இருந்தது.

மோடிக்கு அழைப்பு

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்து எடுக்கப்பட்டவுடன் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இந்திய-அமெரிக்க உறவு பற்றி பேசினார்.

இந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வாஷிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த புதன் கிழமை காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு புறப்பட்டார்.

வரவேற்பு

நேற்று காலை அவர் வாஷிங்டன் போய்ச்சேர்ந்தார். அவர் அங்குள்ள ஆண்ட்ரூ விமானப்படை தளத்தில் தரை இறங்கினார். அவரை அமெரிக்க அரசின் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு துணைச்செயலாளர் (நிர்வாகம் மற்றும் வளங்கள்) பிரையன் மெக்கீன், இந்திய தூதர் தரண்ஜித் சிங் உள்பட அதிகார வர்க்கத்தினர் வரவேற்றனர்.

மோடி அங்கு சென்றிறங்கியபோது மழைச்சாரல் வீசிக்கொண்டிருந்தது. அதற்கு மத்தியிலும் மூவர்ணக்கொடியை ஏந்திக்கொண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். கோஷங்களை முழங்கினர்.

பிரதமர் மோடியுடன் கை குலுக்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு கைகளை நீட்டினர். அப்போது அவர், அவர்கள் அருகில் சென்று பேசி கை குலுக்கியதுடன், படமும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி

இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப்பின் பிரதமர் மோடி அமெரிக்காவில் தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை தொடங்கினார். இதில் முதலாவதாக அமெரிக்காவை சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அந்தவகையில் ‘அடோப்’ நிறுவன தலைவர் சாந்தனு நாராயன், ‘ஜெனரல் ஆட்டோமிக்ஸ்’ நிறுவன தலைவர் விவேக் லால், ‘குவால்கம்’ தலைவர் கிறிஸ்டியானோ அமோன், ‘பர்ஸ்ட் சோலார்’ தலைவர் மார்க் விட்மர், ‘பிளாக்ஸ்டோன்’ தலைவர் சூவர்ஸ்மான் ஆகியோருடன் பிரதமர் மோடி நேருக்கு நேர் சந்திப்புகளை நிகழ்த்தினார். இதில் சாந்தனு நாராயன், விவேக் லால் ஆகியோர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர்.

பிரதமர் நரேதந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து விவாதித்தார். இருநாடுகளுக்கு இடையே பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேசினர். வணிகம், பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத ஆற்றல் உருவாக்கம் குறித்தும் ஸ்காட் மோரிசனிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

கமலா ஹாரிஸ்

ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.45 மணிக்கு சந்தித்துப்பேசினார். அப்போது பேசிய மோடி, சிறப்பான வரவேற்பளித்ததற்கு கமலாஹாரிசுக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா 2வது அலையின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு உதவியதற்காக அமெரிக்காவுக்கு நன்றி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் பைடன்-கமலா ஹாரிசின் தலைமையில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகள் புதிய உயரங்களை தொடும் என்றும் மோடி குறிப்பிட்டார். மேலும் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் இந்தியா வரவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் மிகமுக்கிய பங்காளராக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்றின் தொடக்கத்தில் பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியதில் இந்தியா மிகமுக்கிய பங்காற்றியதாக கமலா ஹாரிஸ் நினைவு கூர்ந்தார். இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள கமலா ஹாரிஸ், இந்தியாவில் தினசரி 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவது வியப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் கண்டுபிடிப்பில் எவ்வாறு பங்களிப்பை அதிகரிப்பது என்பது தொடர்பாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டது.

ஜப்பான் பிரதமர்

கமலா ஹாரிசை சந்தித்தப்பிறகு ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவுடன் பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு விவகாரங்களை ஆலோசித்தார். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயுள்ள நல்லுறவு, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஜோ பைடனுடன் சந்திப்பு

இதனை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனனை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு இந்த சந்திப்பு நடந்தது.
வெள்ளை மாளிகை முன் திரண்டிருந்த இந்தியர்கள் கலாச்சார நடன நிகழ்ச்சிகளுடன் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த சந்திப்பின் போது ஆப்கானிஸ்தான்பிரச்சினை, சீன எல்லை பிரச்சினை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்துதல், கொரோனா தடுப்பு விசயத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவத, சுற்றுசூழல் பருவநிலை மாற்றம் ஆகியவை பற்றி பேசினார்கள்.
மேலும் இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு, பயங்கரவாதம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

அப்போது துணை அதிபர் கமலா ஹாரிசும் உடன் இருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.