”போலி மதச்சார்பின்மையால் இந்தியா அழிவை நோக்கித் தள்ளப்படும்”-கேரள பாதிரியார் எச்சரிக்கை
1 min read‘Pseudo-secularism will push India to destruction’ – Kerala priest warns
3.10.2021
”போலி மதச்சார்பின்மை கொள்கையை கடைப்பிடித்தால், இந்தியா அழிவை நோக்கித் தள்ளப்படும்,” என, கேரள சைரோ – மலபார் கத்தோலிக்க சபையின் பலா தேவாலய பாதிரியார் ஜோசப் கலரங்கட் எச்சரித்துள்ளார்.
மதமாற்றம்
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு முஸ்லிம் இளைஞர்கள், கிறிஸ்துவப் பெண்களை காதலித்து போதைக்கு அடிமையாக்கி மதம் மாற்றுவது, பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக, ஜோசப் கலரங்கட் சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பின் மவுனமாக இருந்த ஜோசப், காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, ‘தீபிகா’ என்ற தேவாலய பத்திரிகையில் கட்டுரை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:-
எச்சரிக்கை
ஒரு சமூகத்தின் தீயவைகள் குறித்து எச்சரிக்கும்போது, அதை அலட்சியப்படுத்தாமல் விவாதித்து தீர்வு கண்டால் தான் எதிர்காலத்தில் அத்தகைய செயல்கள் எழுவதை தடுக்க முடியும். அரசியல் சாசனம்மதச்சார்பின்மை அடிப்படையில் தான் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தினரும், வகுப்பினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இந்திய மதச்சார்பின்மையின் சாரம், அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்பதே. மேற்கு நாடுகளை மதவாதம் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.
அதுபோன்ற நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது என்றால், மதச்சார்பின்மை குறித்து போலியாக பேசுவதை விடுத்து, உண்மையாக மதச்சார்பின்மை கொள்கையை பின்பற்ற வேண்டும்.
காந்தியின் போதனைகள் உண்மையான மதச்சார்பின்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. மதச்சார்பின்மை என்ற போர்வையில், கேரள மக்கள் மதச்சார்பை நோக்கி இழுக்கப்படுகின்றனரோ என்ற கவலை உள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.