சொகுசு கப்பலில் போதை விருந்து: ஷாருக்கான் மகன் உள்பட 8 பேரிடம் விசாரணை
1 min readDrug party on luxury ship: Investigation of 8 people including Shah Rukh Khan’s son
3.10.2021
சொகுசு கப்பலில் போதை விருந்து நடந்தது. இது தொடர்பாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரிடம் விசாரணை நடந்தது.
போதை விருந்து
மும்பையில் இருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலில் போதை பாரட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே தலைமையில் அதிகாரிகள் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.
கப்பல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பமானது. பார்ட்டியில் அனைவரும் ஹசிஷ், எம்டி, கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தினர்.
விசாரணை
இதையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி போதை விருந்தில், போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 13 பேரை பிடித்தனர். இதில் 3 பேர் பெண்கள் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, போதை விருந்து நடத்தியது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உள்பட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வாங்கடே உறுதிப்படுத்தியுள்ளர்.
மும்பையில் 8 பேரிடமும் விசாரணை நடப்பதாகவும் அவர்களிடம் செல்போன்களின் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையின் முடிவில் அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளி வருகின்றன.
ரூ.1 லட்சம் கட்டணம்
போதை விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ. 1 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டதாகவும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.