சசிகலாவிற்கு உரிமை இல்லை: பழனிசாமி,பன்னீர்செல்வம் கோர்ட்டில் வாதம்
1 min read
Sasikala has no right: Palanisamy, Panneerselvam argument in court
23.10.2021
‛‛அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை,” என, பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பில் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வாதிடப்பட்டது.
சசிகலா
அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா இறப்புக்கு பின், பொதுச் செயலராக சசிகலாவும்; துணை பொதுச்செயலராக தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதன்பின், சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந் தேதி அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. அதில், நிர்வாகிகளாக சசிகலா, தினகரன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வழக்கு
‘இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது’ என, அறிவிக்கக்கோரி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.பின், அ.ம.மு.க., என்ற கட்சியை நடத்தி வருவதால், இந்த வழக்கில் இருந்து விலகுவதாக, தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சசிகலா மட்டும் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.
உரிமை இல்லை
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பழனிசாமி, பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை,” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெறாததால், வழக்கு வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.