முழு அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் அடக்கம்
1 min readBurial of the body of St. Rajkumar with full state honors
31.10.2021
புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்
பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார்(வயது 46) கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது விருப்பப்படி உடனடியாக கண்கள் தானம்செய்யப்பட்டன.
புனித் ராஜ்குமாரின் மறைவால் ஒட்டுமொத்த கர்நாடக மக்களும்சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மாநிலம் முழுவதும் முக்கியஇடங்களில் அவரது புகைப்படங்களை வைத்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் அசோக், சோமண்ணா, முனிரத்னா உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் புனித்தின் சகோதரர்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், மனைவிஅஷ்வினி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ஜூனியர் என்டிஆர், யஷ் மற்றும் நடிகைகள் சுமலதா, ரம்யா, ரக்ஷிதா உட்பட 100-க்கும் மேற்பட்டோரும், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
மகள் நாடு திரும்பினார்
அமெரிக்காவில் படித்துவந்த புனித் ராஜ்குமாரின் மகள் திரிதி உடனடியாக விமானம் மூலம் நாடு திரும்பினார். அவரது வருகைக்கு தாமதம் ஆனதால் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டன.
டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு வந்த திரிதி, நேற்று மாலை 6 மணிக்கு கண்டீரவா ஸ்டேடியத்தை வந்தடைந்தார். தந்தையின் உடலை பார்த்து திரிதி கதறி அழுதார்.
நல்லடக்கம்
இந்தநிலையில் புனித் ராஜ்குமாரின் இறுதிஊர்வலம் இன்று காலை கண்டீரவா ஸ்டேடியத்தில் தொடங்கியது. யஷ்வந்த்பூர் அருகிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்குகள் 21 குண்டுகள் முழங்கமுழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.