பத்ம விபூஷண் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மரணம்
1 min read
Death of Padma Vibhushan Award winning writer
15.11.2021
பத்ம விபூஷண் விருது பெற்ற புகழ்பெற்ற மராட்டிய எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே காலமானார். அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர்
மராட்டிய மாநிலத்தின் பிரபல எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே. வரலாற்று ஆசிரியரும், மராட்டிய எழுத்தாளருமான பத்ம விபூஷன் விருது பெற்றவர்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது படைப்புகள் மூலம் புகழ் பெற்றவர் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப் புரந்தரே. வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான இவர், 2019-ம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது தொடர்பான உடல் நலக்குறைவு காரணமாக புனேவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல், மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொள்ளாததை தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்தார்.
மரணம்
இந்நிலையில் தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமானதை அடுத்து, இன்று அதிகாலை 5 மணியளவில் பாபாசாகேப் புரந்தரே காலமானார். அவருக்கு வயது 99. அவரது இறுதி சடங்குகள் வைகுண்ட சுடுகாட்டில் நடைபெற்றது.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரேவின் மறைவு, வரலாறு மற்றும் கலாச்சார உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. வரும் தலைமுறையினர் சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் மேலும் இணைந்திருப்பதற்கு அவருக்கு நன்றி. அவரது மற்ற படைப்புகளும் நினைவுகூரப்படும்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
மேலும் மறைந்த பாபாசாகேப் புரந்தரேவுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.