June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தீவுகளை பேண பனை மரங்களை நடும் தூத்துக்குடி மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

1 min read

Prime Minister Modi praises the people of Thoothukudi for planting palm trees to protect the islands

28.11.2021

கடல் தீவுகளை பேண பனை மரங்களை நடும் தூத்துக்குடி மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

மோடி பேச்சு

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இன்று 83-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தூத்துக்குடி மக்களுக்கு மோடி பாராட்டுகளை தெரிவித்தார்.

இன்னும் 2 நாட்களில் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. அதில் நாடு கடற்படை தினம் மற்றும் ஆயுதப்படைகளின் கொடி தினத்தை கொண்டாடுகிறது.

1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின் பொன்விழா ஆண்டை டிசம்பர் 16-ந்தேதி கொண்டாடுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் நாட்டின் பாதுகாப்பு படையினரை நினைவு கூர்கிறேன். நமது மாவீரர்களை நினைவு கூர்கிறேன். அந்த மாவீரர்களை பெற்றெடுத்த துணிச்சலான தாய்மார்களையும் நினைவு கூர்கிறேன்.

அம்பேத்கர்

டிசம்பர் மாதத்தில் மற்றொரு பெரிய நாள் நமக்கு வருகிறது. டிசம்பர் 6-ந்தேதி பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுநாள். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டுக்காகவும், சமுதாயத்துக்காகவும், கடமைகளை ஆற்றுவதற்காகவும் அர்ப்பணித்தவர்.

அரசியல் சாசனத்தின் அடிப்படை உணர்வு நம் அனைவரிடம் இருந்தும் நமது கடமைகளை நிறைவேற்றுவதை எதிர்பார்க்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

இயற்கையை நாம் பாதுகாக்கும்போது அதற்கு ஈடாக இயற்கை நமக்கு வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் அளிக்கும். நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம். அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும்.

பனை வளர்ப்பு

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தூத்துக்குடியில் உள்ள சிறிய தீவுகள், திட்டுக்கள் கடலில் மூழ்காமல் இருக்க பனைமரங்களை மக்கள் நடுகிறார்கள்.

புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று நிலத்துக்கு பனைமரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. பனை மரங்களை நடுவது பாராட்டத்தக்கது.

உத்தர பிரதேசத்தின் ஜலானில் நூன் நதி என்ற ஒரு நதி இருந்தது. அந்த நதி படிப்படியாக அழிவின் விளிம்புக்கு வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு நெருக்கடி உருவானதால் ஜலான் மக்கள் இந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்தனர்.

அவர்கள் நதியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் நூன் நதி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அந்த நதிக்கு ஜலான் மக்கள் புத்துயிர் அளித்தனர்.

அரசாங்கத்தின் முயற்சியால், அரசின் திட்டங்களால் ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றியது, அந்த வாழ்க்கையின் அனுபவம் என்ன? என்பதை கேட்கும்போது மனதிற்கு திருப்தி தருவதோடு அந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான உத்வேகத்தையும் அளிக்கிறது.

சேவையே குறிக்கோள்

இதைத்தான் நான் வாழ்க்கையில் தேடுகிறேன். ஆட்சி, அதிகாரத்தில் இருக்க விரும்பவில்லை. மக்களுக்கு சேவை செய்வதே எனது குறிக்கோள்.

எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர விரும்பவில்லை. நான் சேவையில் இருக்க வேண்டும். எனக்கு இந்த பிரதமர் பதவி அதிகாரத்துக்காக அல்ல. சேவைக்காகவே இருக்கிறேன்.

டெல்லியில் சமீபத்தில் நடந்த குழந்தைகள் பேச்சு நிகழ்ச்சியில், சுதந்திர போராட்டம் தொடர்பான கதைகளை குழந்தைகள் வழங்கினர். இதில் இந்தியாவுடன் நேபாளம், மொரீசியஸ், தான்சானியா, நியூசிலாந்து மற்றும் பிஜி ஆகிய நாடுகளை சேர்ந்த குழந்தைகளும் பங்கேற்று அவர்களின் படைப்பாற்றலையும், இந்தியாவின் வரலாற்றையும் மிக திறம்பட வெளிப்படுத்தி அழகான கவிதைகளை அளித்தனர். இது மிகவும் சிறப்பான ஒன்று.

பிருந்தாவனம் கடவுளின் அன்பின் நேரடி வெளிப்பாடு என்று கூறப்படுகிறது. பிருந்தாவனத்தின் பெருமையை நாம் அனைவரும் திறமைக்கு ஏற்ப சொல்கிறோம். ஆனால் பிருந்தாவனத்தின் உள்ளார்ந்த மகிழ்ச்சியை முழு மையாக அடைய முடியாது. அது எல்லையற்றது. அதனால்தான் பிருந்தா வனம் உலகம் முழுவதிலும் இருந்து மக்களை ஈர்க்கிறது.

இளைஞர்கள் அதிகளவில் உள்ள எந்த நாட்டிலும் யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகள், சவால்களை எதிர்கொள்வது, செய்து முடிக்கும் மனப்பான்மை இந்த 3 வி‌ஷயங்கள் மட்டும் இருந்தால் முன்னோடி இல்லாமல் எட்டப்பட்டு அற்புதங்கள் நடக்கும்.

தற்போதைய நாட்களில் ‘ஸ்டார்ட்-அப்’ என்று நம்மை சுற்றி கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஸ்டார்ட்-அப் துறையில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது. ஸ்டார்ட்-அப் துறையில் ஆண்டுக்காண்டு சாதனை முதலீடுகள் பெறப்படுகிறது. இந்த துறை வேகமாக வளர்ந்து வருகிறது.

கொரோனா

கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே மக்கள் நோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அனைவரின் கடமை.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.