May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது ஏன்?; மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு விளக்கம்

1 min read

Why Tamil Nadu was not included in the Republic Day parade ?; Central Government interpretation of MK Stalin

18/1/2022
குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது ஏன்? என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வல்லுநர் குழு தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அலங்கார ஊர்தி

குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று கூறியது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

நேற்று முதல் பேசுபொருளாக மாறிய இந்த விவகாரத்துக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், தமிழகம், மேற்குவங்காள மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறாது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துவிட்டது.

காரணம் ஏன்?

இந்த நிலையில், தமிழகத்தின் ஊர்தி இடம் பெறாதது ஏன்? பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது. ஆனால் இறுதியான 12 அலங்கார ஊர்திகளில் தமிழகம் தேர்வு செய்யப்படவில்லை. வல்லுநர் குழு தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஜ்நாத் சிங் இது தொடர்பான கடிதத்தை எழுதியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.