May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

திருச்செந்தூர், பழனி கோவில்களில் 5 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் குவிந்தனர்

1 min read

Devotees gathered at Thiruchendur and Palani temples after 5 days

19.1.2022

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பழனி முருகன் கோவிலில் 5 நாட்களுக்கு பிறகு தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்.

திருச்செந்தூர்

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அதேபோல் கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதற்காக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இன்று முதல் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தைப்பூசம்

தைப்பூசத் தினமான நேற்று வராத பக்தர்கள் இன்று திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

பழனி

அதே போல் பழனி முருகன் கோவிலிலும் பக்தர்கள் 5 நாட்களுக்கு பிறகு குவிந்தனர்.

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தைப்பூச திருவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.

இதனிடையே கடந்த 14-ந்தேதி முதல் நேற்று வரை 5 நாட்கள் கோவில்களில் பக்தர்களுக்கு தரிசன தடை விதிக்கப்பட்டது. இதனால் பழனிக்கு பாதயாத்திரை மற்றும் காவடி, அலகு குத்தி வந்த பக்தர்கள் அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முன்பு நின்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

இந்நிலையில் நேற்றுடன் 5 நாட்கள் தரிசன தடை நிறைவு பெற்றது. எனவே இன்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கூட்டம் காரணமாக பக்தர்கள் பகுதி, பகுதியாக பிரித்து அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.