June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

1 min read

Action against companies that provided substandard Pongal gift items; Order of Chief Stalin

21/1/2022

தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

பொங்கல் பரிசு

தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (21-1-2022) நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர். மேலும், தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

நடவடிக்கை

விரிவான ஆய்வுக்குப் பின்னர், பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

பொது மக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டுமெனவும், அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டுமென்றும், தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதலமைச்ச அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் நிதித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *