June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தானில் கல்வித்துறை தனியார்மயம்: போராட்டம் வெடித்தது

1 min read

Protests erupt over privatization of education in Pakistan

4.6.2026
பாகிஸ்தானில் பொதுக் கல்வி நிறுவனங்களை அதிரடியாகத் தனியார்மயமாக்கி வரும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக, அங்குள்ள முன்னணி ஆசிரியர் சங்கங்களும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளும் மிகக் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன.

அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த பொதுக் கல்வி அமைப்பும் முற்றிலும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ராவல்பிண்டியில் நடைபெற்ற அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பில், பஞ்சாப் ஆசிரியர் சங்கம், கல்வியாளர்கள் சங்கம் மற்றும் கல்வி ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் முக்கியப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, இந்தத் தனியார்மயமாக்கல் திட்டத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்களைப் பொதுவெளியில் உடைத்துள்ளனர்.

அரசு-தனியார் கூட்டுமுறை என்ற போர்வையில், கடந்த ஓராண்டில் மட்டும் பாகிஸ்தான் அரசு சுமார் 15,000 அரசுப் பள்ளிகளைத் தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்திடம் தாரை வார்த்துள்ளது.
இந்தத் திடீர் அவுட்சோர்சிங் நடவடிக்கையின் காரணமாக, கல்வித்துறையில் இருந்த சுமார் 50,000 நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட்டுள்ளதாகச் சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அனுபவம் வாய்ந்த நிரந்தர ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு, அந்த இடங்கள் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு நிரப்பப்படுவதால் ஒட்டுமொத்த பொதுக் கல்வியின் தரம் படுபாதாளத்திற்குச் சரிந்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளை ஏலத்திற்கு எடுத்து நடத்தும் தனியார் நிறுவனங்கள், பட்டதாரிகளையும் எம்பில் (MPhil) போன்ற உயர் கல்வி முடித்த இளைஞர்களையும் மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்திப் பெரும் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றன.

உயர் கல்வி தகுதி கொண்ட இந்த ஆசிரியர்களுக்கு மாதத்திற்கு வெறும் 8,000 முதல் 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசின் தற்போதைய சட்டப்படி, ஒரு படிக்காத சாதாரணத் தொழிலாளிக்குக் கூட குறைந்தபட்ச மாத ஊதியமாக சுமார் ரூ. 45,000 வழங்கப்பட வேண்டும்.

ஆனால், எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலியில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்படுவது பெரும் அவலமாகப் பார்க்கப்படுகிறது.

தனியார் நிர்வாகங்களின் கீழ் வேலை செய்யும் ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கோடை விடுமுறை நாட்களில் ஒரு பைசா கூட சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஒரு பள்ளியை வழிநடத்தும் தலைமை ஆசிரியர்களுக்குக் கூட வெறும் 12,000 ரூபாய் தான் மாதச் சம்பளமாகக் கிடைக்கிறது. இது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் Dignity எனப்படும் கண்ணியத்தையே குலைக்கும் செயல் என தொழிற்சங்கங்கள் கொந்தளித்துள்ளன.

அரசு மிகுந்த விளம்பரத்துடன் கொண்டு வந்துள்ள ‘ஸ்கூல்ஸ் ஆஃப் எமினென்ஸ்’ என்ற புதிய கல்வித் திட்டமும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு ஆரம்பச் சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ. 60,000 வரை தருவதாக அரசு கூறினாலும், அவர்களுக்கு எவ்வித வேலை பாதுகாப்பும் கிடையாது. இதில் சேரும் ஊழியர்களுக்குப் பென்ஷன் அல்லது கிராஜுவிட்டி போன்ற எந்தவொரு ஓய்வூதியப் பலன்களும் வழங்கப்படுவதில்லை.

இந்தத் தற்காலிக ஒப்பந்த முறை, எதிர்காலத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய நிரந்தர அரசு வேலைவாய்ப்புகளை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் என அஞ்சப்படுகிறது.

இந்தக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய பஞ்சாப் ஆசிரியர் சங்கத் தலைவர் ரம்ஜான் இன்கலாபி, கல்வியாளர்கள் சங்கத் தலைவர் பஷாரத் இக்பால் ராஜா, கல்வி ஆர்வலர் அகியான் குல் மற்றும் கல்வி ஓய்வூதியதாரர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ஷஃபிக் பலோவாலியா ஆகியோர், “அரசின் இந்தத் தனியார்மயமாக்கல் கொள்கை, ஏழை எளிய மாணவர்களின் பொதுக் கல்வியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆசிரியர் சமூகத்தை வறுமையிலும் பாதுகாப்பற்ற சூழலிலும் தள்ளியுள்ள இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிடாவிட்டால், நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் வெடிக்கும்” என எச்சரித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *