April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு வந்த மர்ம வயிற்றுவலி/ நகைச்சுவை கதை

1 min read

Abdominal pain for Kannayiram / Story by Thabasukumar

2.2.2022
வடநாட்டில் காணாமல்போன கழுதையை கண்டு பிடிக்க போலீசார் யோசனை கேட்டால் சொல்லலாம் பரிசு கிடைக்கும் என்று கண்ணாயிரம் நினைத்தார். அதற்கு இந்தி கொஞ்சம் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார்.இதற்காக இருபது ரூபாய்க்கு பூங்கொடி வாங்கி வந்த இந்தி புக்கில் கழுதைக்கு இந்தியில் என்ன போட்டிருக்கிறார்கள் என்று தேடியபோது காணவில்லை.
இதனால் கோபம் அடைந்து கண்ணாயிரம் நான் எப்படி வடநாட்டு கழுதையை கண்டுபிடிப்பேன் என்று பூங்கொடியை சத்தம் போட்டார்.
உடனே கழுதை போல் கத்துங்க அந்த சத்தம் கேட்டு கழுதைகள் ஓடிவந்திடும் என்றார் பூங்கொடி. அதை கேட்டதும் கண்ணாயிரம்…கழுதை எப்படி கத்தும் அதுக்கு பயிற்சி எடுக்கணும் தனியா என்று முணங்கியபடி இருந்தார்.
பூங்கொடி அதை பார்த்து ஏங்க முணங்குறீங்க.. இந்தியிலே கழுதையை எப்படி சொல்வாங்கன்னு நம்ம பக்கத்து வீட்டு அக்காவிடம் கேட்டுபார்ப்போம். நீங்க நாளைக்கு காட்டுக்கு போயி கழுதை எப்படி கத்துன்னு பாருங்க..அப்புறம் நீங்க கழுதைமாதிரி கத்துங்க அந்த குரலை கேட்டு கழுதை வருதான்னு பார்ப்போம்.வரலைன்னா மீண்டும் கத்துங்க. என்ன நான் சொல்லுறது புரியுதா என்றார் .
கண்ணாயிரம் மெல்ல …கழுதை கடிச்சுபுட்டுன்னா என்ன பண்ணுறது என்று பரிதாபமாக கேட்டார். உங்களுக்கு தைரியம் காணாது. வாக்கிங் போனா நாய் கடிச்சிடும்…காட்டுக்கு போனா கழுதை கடிச்சிடும்…வெளியே போனா ரவுடி வந்து வெட்டிருவான்னு புலம்புறீங்க.முதலில் உங்களை உடற்பயிற்சி கூடத்துக்கு கூட்டிட்டு போயி சிலம்பாட்டம் கற்றுக்கொடுக்கணும்.கராத்தே சொல்லிக்கொடுக்கணும் என்றார் பூங்கொடி.
கண்ணாயிரத்திடமிருந்து பதில் வரவில்லை.என்ன நான் சொல்லுறது புரியுதா என்று பூங்கொடி கேட்டார்.கண்ணாயிரம் மெதுவாக…சிலம்பாட்டம் கற்றுக்கணுமுன்னா பாலு குடிக்கணும்.முட்டையை உடைச்சு குடிக்கணும்.மட்டன் சாப்பிடணும்.செலவுசாஸ்தியாகுமே என்றார்.
அதை பத்தி ஏன் கவலைபடுறீங்க…நான் என் அப்பாக்கிட்டவாங்கி செலவு பண்ணுறன்…நாளைக்கு நாம உடற்பயிற்சி கூடத்துக்கு போறோம். நீங்க சாப்பிட்டுட்டு நிம்மதியா படுத்து தூங்குங்க என்றார் பூங்கொடி.
அதை கேட்டதும் கண்ணாயிரம் …ம் எங்க போனாலும் தப்பமுடியாது போல…என்ன செய்யுறது என்று யோசித்தபடி இருந்தார்.சரி நாளைக்கு பார்ப்போம் என்றார் கண்ணாயிரம்.
ஆனா..உங்க அப்பாக்கிட்ட பணம் கேட்காண்டாம்.அவர் ஏதாவது சொல்வார் என்று பூங்கொடியிடம் கண்ணாயிரம் சொன்னார். ஏங்க…பிளாட்பார கடைக்காரனிடம் எழுபத்தி ஐந்து ரூபாய்க்கு வாங்கிய சேலை கிழிஞ்சிட்டதால அவனை மிரட்டி நூறு ரூபாய் வாங்கிட்டு வந்திட்டியள… அதை எங்க அப்பாக்கிட்ட சொன்னா சந்தோஷப்படுவார். உங்க திறமை உங்களுக்கு தெரியல…உங்களுக்குள் ஒழிஞ்சு கிடக்கும் திறமையை வெளியே கொண்டுவரணும்.. அது என் வேலை .பயப்படாதீங்க என்றார்.
கண்ணாயிரம் என்ன சொல்லன்னு தெரியாம விழித்தார்.அதை பார்த்த பூங்கொடி ..ஏங்க தெம்பா இருங்க…நைட்டு உங்களுக்கு சப்பாத்தி.குருமா…என்றார்.கண்ணாயிரம் உடனே சோறு கிடையாதா என்று பரிதாபமாக கேட்டார்.
அதற்கு பூங்கொடி..ஏங்க தினம் சோறுதான சாப்பிடுறீங்க….இனி தினம் மதியம் மட்டும்தான் உங்களுக்கு சாப்பாடு.காலையிலேயும் இரவிலும் சப்பாத்திதான் என்று சொன்னார்.சப்பாத்தியா என்று கண்ணாயிரம் வாயை பிளந்தார்.வாயை பிளக்காதீங்க…வடநாட்டுக்கு கழுதையை தேடிப்போனா…அங்கே சப்பாத்திதான சாப்பிடணும்.அதுக்கு இப்பமே பழகிக்கிங்க….என்றார்.
கண்ணாயிரம்…என்ன சுத்தி சுத்தி கழுதையாத்தான் வருது ..இதுல சப்பாத்தி வேற…எப்படி இரண்டு நேரம் சாப்பிடுறது….எதை சொல்லியும் தப்பமுடியாது போல என்று நினைத்தவர்…கண்களை அகலவிரித்து பார்த்தார்.பூங்கொடி சப்பாத்தி ரெடி பண்ணினார். கண்ணாயிரம் கவலையுடன் பார்த்து கொண்டிருந்தார்.மூணு சப்பாத்தி குருமா கொண்டுவந்து கொடுத்தார் பூங்கொடி. கண்ணாயிரம் விருப்பம் இல்லாமல் சப்பாத்தியை பிய்த்து மெல்ல மெல்ல சாப்பிட்டார்.குருமா ருசியா இருந்தது.இரண்டு சப்பாத்தியை சாப்பிட்டபின் ஒரு சப்பாத்தியை வைத்துவிட்டு எழுந்தார். என்ன எழுந்திட்டிங்க…இன்னொண்ணு சாப்பிடுங்க என்றார் பூங்கொடி.
வேண்டாம்..வேண்டாம்..வயிறு நிரம்பிட்டு.இனி போதும் என்று சொல்லிவிட்டு கைகழுவிட்டு வந்தார் கண்ணாயிரம்.அதை கேட்டதும் பூங்கொடி…சரி ,சரி காலையிலே அதிகமா சப்பாத்தி சாப்பிடுங்க என்று சொன்னார். கண்ணாயிரம்..இந்த சப்பாத்தியிலிருந்து எப்படி தப்புவது என்று யோசிக்க தொடங்கினார்.சிறிது நேரம் அங்கும் இங்கும் நடந்தார்.நேரம் கடந்தது.பூங்கொடி மீதி இருந்த சப்பாத்தியை சாப்பிட்டார்.
கண்ணாயிரம் கட்டிலில் போய் படுத்தார்.பூங்கொடியும் சிறிது நேரம் இருந்துவிட்டு விளக்கை அணைத்தார்.பாயை விரித்து தூங்கினார்.கண்ணாயிரத்துக்கு தூக்கம் வரவில்லை.கட்டிலில் உருண்டு கொண்டே இருந்தார்.
நள்ளிரவு பன்னிரண்டு மணி ஆனது.சுவர் கடிகாரம் பனிரெண்டு முறை ஒலித்துவிட்டு ஓய்ந்தது. கண்ணாயிரம் திடீரென்று அம்மா வயிறு வலிக்குதே என்று கத்தினார்.(தொடரும்)

-தலைப்பு.
வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.