May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு அ.தி.மு.க., பா.ம.க. உள்பட 37 தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

1 min read

AIADMK, BJP to join All India Social Justice Federation MK Stalin’s call for 37 leaders, including

2.2.2022
அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு கூட்டணியில் இணைய அ.தி.மு.க., பா.ம.க.விற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமூகநீதிக் கொள்கை

தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26-ந்தேதி, குடியரசு நாளன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லல்லு பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்), பரூக் அப்துல்லா (ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),

சீதாராம் யெச்சூரி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்), எச்.டி. தேவேகவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்), என். சந்திரபாபு நாயுடு (தெலுகு தேசம்), நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதா தளம்), மம்தா பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்), மெகபூபா முப்தி (ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி),

உத்தவ் தாக்கரே (சிவ சேனா), அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), கே. சந்திரசேகர ராவ் (தெலுங்கானா ராஷ்டிர சமிதி), ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா),

என். ரங்கசாமி (என். ஆர். காங்கிரஸ்), லலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), பவன் கல்யாண் (ஜன சேனா), வேலப்பன் நாயர் (அகில இந்திய பார்வார்டு பிளாக்), அசாதுதீன் ஓவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்), கே.எம். காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்),

ரேனு ஜோகி (ஜனதா காங்கிரஸ்), அமரீந்தர் சிங் (பஞ்சாப் லோக் காங்கிரஸ்), சுக்பீர் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம்), சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி ராம் விலாஸ்), ராஜ் தாக்கரே (மகாராஷ்டிர நவநிர்மான் சேனா), ஓம் பிரகாஷ் சவுதாலா (இந்திய தேசிய லோக் தளம்), கே.எம். மணி (கேரளா காங்கிரஸ் எம்),

ஓ. பன்னீர்செல்வம் (அ.இ.அ.தி.மு.க), வைகோ (ம.தி.மு.க), ராமதாஸ் (பா.ம.க), தொல். திருமாவளவன் (வி.சி.க), ஜவாஹிருல்லா (ம.ம.க), ஈ.ஆர். ஈஸ்வரன் (கொ.ம.தே.க)

என இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அரசியல் கட்சி தலைவர்களுக்குக் கீழ்க்காணும் கடிதத்தை நேற்று (புதன்கிழமை) அனுப்பி, இக்கூட்டமைப்பில் இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கூட்டமைப்பு

நலம் திகழ இந்தக் கடிதத்தைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்.
கடந்த 26-ந்தேதியன்று நமது நாட்டின் 73-வது குடியரசு நாளை நாம் கொண்டாடிய வேளையில், கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைத்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தேன்.

எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும்.

சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதி செய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை கட்டியமைக்க முடியும்.

தமிழ்நாட்டில், வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் சமூகநீதிக்கான விதைகளை மக்களின் மனங்களிலும் எண்ணங்களிலும் விதைத்து, தந்தை பெரியார் எனும் பகுத்தறிவுச் சுடர் ஏற்படுத்திய சமூகநீதிப் புரட்சியை இம்மண்ணின் ஒவ்வொரு துகளும் விவரிக்கும்.

அசைக்க முடியாத இந்தத் தத்துவம்தான் கடந்த எண்பது ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக விளங்கி அதன் அரசியலை பண்படுத்தி வந்துள்ளது. சமத்துவமின்மையை ஒழித்து அனைத்துத் துறைகளிலும் இம்மாநிலத்தை முன்னேற்ற முடிந்ததென்றால் அதற்குக் காரணம் சமூகநீதித் தத்துவத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பிடம்தான்.

இக்கடிதத்தை நான் எழுதும் இவ்வேளையில், தனித்தன்மை மிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆனதுமான நமது மத்தியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும்.

அரசியல் ஆதாயம் இல்லை

இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்.

சமூகநீதித் தத்துவத்தின் மீதான தனது உறுதிப்பாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு முறையும் வலிமையாகப் போராடி வந்துள்ளது என்பது, அண்மையில், நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் வழியாக 27 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்ததில் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டப்பட்டுள்ளது.

எனினும் சமூகநீதியை உறுதிசெய்ய இடஒதுக்கீடு மட்டுமே போதுமானதல்ல. சமூகத்தின் பொது நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு நூற்றாண்டுகளாய் எதிர்கொண்ட அடக்கு முறையை உடைத்தெறிய வேண்டுமானால் அத்தகையோருக்கு ஒவ்வொரு படியிலும் சில சிறப்புரிமைகள் தரப்பட வேண்டும்.

சாதிப் பாகுபாட்டுடன் பாலினப் பாகுபாட்டை ஒழிக்கவும்; மாற்றுத்திறனாளிகள் பொதுநீரோட்டத்தில் இணைந்து போட்டியிடக் கூடிய வகையிலும் நாம் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்.

மேற்குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைய, உண்மையாகவே மாநிலங்களாலான மத்தியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது என நான் முழுமனதாக நம்புகிறேன். மண்டல் ஆணையத்தை அமைக்க ஒற்றுமையுடன் நாம் காட்டிய அதே உறுதிப்பாட்டையும் நோக்கத்தையும் இப்போதும் வெளிப்படுத்தியாக வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும், வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதற்காக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆவலுடன் உள்ளன. இந்தியாவில் சமூகநீதிக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டத்தை வார்த்தெடுப்பதற்கும்; இன்னும் சிறப்பாகச் செயல்படக் கூடிய பகுதிகளைக் கண்டறிவதற்கும்; அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்குமான தளமாக இக்கூட்டமைப்பு விளங்கும்.

ஆகவே, தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்/நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கோருகிறேன். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான பொருள் பொதிந்த சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும்.

சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்குப் பிற்போக்குச் சக்திகள் சவால் விடும் இந்த இடர்மிகு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோர்க்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும். இம்முன்னெடுப்பில், எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.