May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க ஆய்வு; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்

1 min read

Study to re-employ public welfare workers; Government of Tamil Nadu information in the Supreme Court

7.2.2022

பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க ஆய்வு செய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மக்கள் நல பணியார்கள்

தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்குமாறு 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையில் கொரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மீண்டும் பணி

இந்த வழக்கு கடந்த மாதம் (ஜனவரி 6) விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில், “பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு எடுக்கவுள்ளது, அதற்கான ஆலோசனைகளின் விவரங்கள் இன்னும் வழக்கறிஞர்களுக்கு தெரிவிக்கப்படாததால் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை 4 வாரங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

4 வாரங்கள் கழித்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் “மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு செய்து முன்மொழிவை அனுப்பி உள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் அந்த முன்மொழிவை பரிசீலனை செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கும். அந்த பரிசீலனை செய்யப்பட, இந்த வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த தகவலால் மீண்டும் 13,500 மக்கள் நல பணியாளர்களுக்கும் பணி வழங்கப்படவுள்ளதா என்ற கேள்வி வலுத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.