கண்ணாயிரத்தை மிரட்டிய முதியவர் / நகைச்சுவை கதை
1 min read
The old man who intimidated Kannayiram/ Story by Thabasukumar
16.2.2022
உடற்பயிற்சி கூடத்துக்கு முகத்தில் அதிகபவுடர் போட்டு மனைவியுடன் புறப்பட்ட கண்ணாயிரத்தை பார்த்து என்ன வேஷம் இது என்று பெண்கள் கேலிசெய்து சிரித்ததால் கண்ணாயிரம் கோபம் அடைந்தார். சிறிது நேரம் கழித்து போவோம் என்று மனைவியுடன் வீட்டுக்கு வந்துவிட்டார். பழைய கண்ணாடியில முகத்தை பார்த்தோம் நல்லாதான இருந்தது…பிறகு ஏன் கேலி பண்ணுகிறார்கள் என்று யோசித்தார். பின்னர் பாத்ரூமுக்கு போயி முகத்தை நன்றாக கழுவினார். துண்டால் முகத்தை துடைத்துவிட்டு செம்பில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தார்.
உடற்பயிற்சி கூடத்துக்கு போகலாம் என்று மனைவியிடம் சொன்னார். பூங்கொடி அவரை பார்த்து என்ன முகத்தை கழுவிட்டீங்க என்று கேட்டார்.அதற்கு அவர் எல்லோரும் கிண்டல் பண்ணுனாங்கல்லா அதனாலத்தான் முகத்தை கழுவிவிட்டேன் என்று சொன்னார்.
அதற்கு பூங்கொடி ஏங்க…முகத்திலே அதிகமாக பவுடர் பூசியிருந்ததால அப்படி கேலி பண்ணுனாங்க.குறையா பவுடர் அடிச்சா கேலி பண்ணமாட்டாங்க என்று சொன்னார். உடனே கண்ணாயிரம் மெல்ல இனி முகத்துக்கு பவுடரே பூசப்போவது இல்லை.அப்படியே வெளியே போவேன் என்றார்.
பூங்கொடி மனதுக்குள் சிரித்தபடி சரி வாங்க…போவோம் என்றார்.மீண்டும் இருவரும் கதவை பூட்டிவிட்டு உடற்பயிற்சி கூடத்துக்கு நடக்க தொடங்கினார்கள்.
அப்போது கண்ணாயிரத்தின் நண்பர் எதிரே வந்தார்.என்ன கண்ணாயிரம் மனைவியுடன் புறப்பட்டு போற என்று கேட்டார்.அதற்கு கண்ணாயிரம்…ஒண்ணுமில்ல இந்த உடற்பயிற்சி கூடத்துக்கு போயி சிலம்பம் கத்துக்க போறேன் என்றார். அதற்கு அவரது நண்பர்…ஓ அப்படியா பரவாயில்ல…அந்த ரவுடி பினாயிலே வந்தான்னா எப்படி சமாளிக்கிறது என்கிறதுக்காக சிலம்பம் படிக்க போறீயா என்றார்.
அதற்கு அவர்…ரவுடி பினாயிலிலே வரல…பிணையில் வருகிறாருன்னு சொல்லணும். டிவியிலே அப்படிதான் சொன்னாங்க என்று சொன்னார். உடனே அவரது நண்பர்..ஏய் நீ தப்பா சொல்லுற…என்றார். கண்ணாயிரம் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை பார்த்த அவரது நண்பர் அதோ டிப்டாப்பா டிரஸ் போட்டுட்டு வாலிபர் ஒருவர் வர்ராரே அவருக்கிட்ட கேட்போம் என்றார்.
கண்ணாயிரமும் சரி என்று ஏற்றுக்கொண்டார். டிப்டாப் வாலிபரிடம் கண்ணாயிரம் சார் ஒரு சந்தேகம்…ஜெயிலில் இருந்து ஒருவர் பாதியிலே வந்தா எப்படி வரமுடியும் என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர்…ஜெயிலில் இருந்து பாதியில வருகிறதென்றால் பெயிலில் வரலாம் என்று சொல்லிவிட்டு நடந்தார்.
கண்ணாயிரத்துக்கு புரியவில்லை.என்ன ஜெயிலிலே பரீட்சை வேறவைப்பாங்களா…அதிலே பெயிலாகிட்டா வெளியேவிட்டுறுவாங்களா…இது சரியா தெரியலையே என்றார்.
அவரது நண்பர் பாத்தியா கண்ணாயிரம் டிப்டாப்பா டிரஸ் போட்டவங்ககிட்டா அப்படிதான் குழப்பிவிட்டுறுவாங்க என்றார். கண்ணாயிரமும் ஆமா ஆமா டிப்டாப்வாலிபர் என்றாலே எனக்கு அலர்ஜி. ஏற்கனவே ஏங்கிட்ட கள்ள நோட்டை தள்ளிவிட்ட டிப்டாப் வாலிபரை இன்னும் தேடிக்கிட்டு இருக்கேன் என்று சொன்னார்.
அப்போது வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த முதியவர் ஒருவர் நடந்து வந்தார். அவரிடம் கேட்கலாமா வேண்டாமா என்று கண்ணாயிரம் யோசித்து கொண்டிருக்கும்போது அந்த முதியவர் கண்ணாயிரத்தை பார்த்து தம்பி இங்கே வக்கீல் வீடு எங்கே இருக்கு என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம் மெல்ல எதுக்கு வக்கீல் வீட்டை கேட்கிறீங்க என்றார். அதற்கு முதியவர் என் மகன் கபாலி கோபக்காரன். தன்னை போல கழுத்திலே மாலைமாதிரி துண்டு போட்டுட்டு வந்த வாலிபரின் கையை வெட்டிப்புட்டான். அவனை பிடிச்சி போலீசார் ஜெயிலிலே போட்டுட்டாங்க.அவனை ஜாமீனில் எடுக்கணும்…அதுக்குதான் வக்கீலை தேடி வந்திருக்கேன் என்று சொன்னார்.
கண்ணாயிரம் மெல்ல…அந்த கபாலி உங்க பையனா.ஜெயிலில் இருந்து பாதியிலே கூட்டிட்டு வரப்போறீங்களா…அதுக்கு பெயர் பெயிலில் வர்ரதா அல்லது ஜாமீனில் வர்ரதா என்று கேட்டார்.
முதியவர் கோபத்துடன் நான் ஒரு நல்ல காரியத்துக்கு போயிக்கிட்டு இருக்கேன்.நீ பெயிலு கியிலுன்னுக்கிட்டு இருக்க…நீ வக்கீல் வீடு எங்கேன்னு சொல்லு நான் என் பைபனை ஜாமீனில் எடுக்கணும் என்று சொன்னார்.
கண்ணாயிரம் சற்று பயத்துடன் கோபப்படாதீங்க…ஜாமீனில உங்க பையன் சீக்கிரம் வந்துருவாரா..ஜெயிலுக்கு போனபிறகு அவருக்கு கோபம் குறைஞ்சிருக்குமா…என்று கேட்டார்.அதற்கு அவர் என் பையன் சிங்க குட்டி.சிறையில் அடைத்தாலும் அவன் சீற்றம் குறையாது. கையை வெட்டியவன் வெளியே வந்தா இனி தலையையே வெட்டுவான் என்றார்.
கண்ணாயிரத்துக்கு பக் என்றது. ஏங்க உங்க பையனுக்கு கொஞ்சம் அறிவுரை கூறி திருத்தக் கூடாதா…இப்படி கையை வெட்டுவான் காலை வெட்டுவான்னு சொல்லுறது நல்லா இருக்கா என்றார்.
உடனே முதியவர்…ஏய் என் பையன் அப்படித்தான் இருப்பான்.உனக்கென்னய்யா..நீ இப்போ வக்கீல் வீட்டை அடையாளம் காட்டுறீயா இல்லையா என்று தன் இடுப்பில் கை வைத்தார். கண்ணாயிரம் கலக்கத்துடன் இடுப்பிலே கைவச்சிங்களே எதற்கு என்று கேட்டார். அதுவா இடுப்பிலே மறைச்சி வச்சிருக்கும் கத்தி இருக்கா இல்லைய்யான்னு பார்த்தேன் என்று முதியவர் கூறியதும் கண்ணாயிரம் கால்கள் நடுங்கியது.
பெரியவரே…நீங்க வக்கீல் வீடு தானே கேட்டிங்க…இப்படியே போங்க போலீஸ்நிலையம் வரும் .அங்கே கேளுங்க சொல்வாங்க என்றார்.
ஏய் போலீஸ் நிலையத்திலே போயி கேட்க சொல்லுறீயா..என்னை மாட்டிவிடலாமுன்னு நினைக்கிறியா..என்மகன் வெளியே வரட்டும் .உன்னை வச்சிக்கிடுறன்..என்று மிரட்டினார் முதியவர்.
அதை கேட்டதும் கண்ணாயிரம் பதறிப்போய் போலீஸ் நிலையத்திலேபோய் கேட்க சொல்லவில்லை. போலீஸ் நிலையம் பக்கம் போய் கேளுங்கன்னு சொன்னேன் என்று சொன்னார்.
முதியவர் ஆவேசத்துடன் நீ வழி சொல்லவேண்டாம்…நானே பாத்துக்கிறேன் என்றபடி வேகமாக நடந்து சென்றார்.
கண்ணாயிரம் என்னசெய்வது என்று தெரியாமல் அவரையே பார்த்து கொண்டிருந்தார்.அவரது நண்பர் என்ன கண்ணாயிரம் கெடுத்துப்பிட்டிய காரியத்தை.அந்த ரவுடி ஜாமீனில் வந்தா என்ன செய்வே என்று பயம்காட்டினார்.
கண்ணாயிரம் பதில் சொல்லாமல் அப்படியே நின்றார்.அவரது நண்பர் நீ ஒண்ணும் பயப்படாதே கண்ணாயிரம்…நான் இருக்கேன் .நீ சிலம்பம் படிச்சிட்டுவா…ரவுடி ஜாமீனில் வெளியேவந்து மிரட்டினா …விளாசிடுவோம் என்றார்.கண்ணாயிரம் கண்களில் பயம் தெரிந்தது.(தொடரும்)
வே.தபசுக்குமார்.புதுவை.