மோடியுடன் உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தை
1 min readUkrainian president holds talks with Modi
26.2.2022
மோடியுடன் உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது போரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கவலையளிப்பதாக உக்ரைன் அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உக்ரைன் அரசு உதவ வேண்டுமென உதவவேண்டுமென ஜெலன்ஸ்கியிடம் இந்திய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் இன்று பேசினார். உக்ரைனில் தற்போது நிலவி வரும் போர் சூழ்நிலை குறித்து ஜெலன்ஸ்கி இந்திய பிரதமரிடம் எடுத்துரைத்தார். போரால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருள் இழப்புகள் கவலையளிப்பதாக உக்ரைன் அதிபரிடம் பிரதமர் மோடி கூறினார்.
சண்டையை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்பதை பிரதமர் மோடி மீண்டும் எடுத்துரைத்தார். அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள், இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தினார். உக்ரைனில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் மீட்க உதவும்படி ஜெலன்ஸ்கியிடம் இந்திய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.