ரஷிய படைகள் தாக்குதலில் 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் பலி
1 min readRussian forces attack 352 civilians, including 14 children
28.2.2022
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 14 குழந்தைகள் உட்பட 352 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷியா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே தலைநகர் கீவ்வில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ராணுவத்திற்கு உக்ரைன் அரசு அறிவுறுத்தி உள்ளது.
முன்னதாக இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷியா எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தநிலையில் உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என ரஷியா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திபில் பேசிய ரஷிய பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் இகோர் கொனஷெங்கோவ், “தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், பலரும் காயமடைந்துள்ளனர். எனினும் உக்ரைன் தரப்பை விட தங்கள் தரப்பில் பாதிப்புகள் பல மடங்கு குறைவுதான்” என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து ரஷ்யா எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
352 பேர்
இந்நிலையில் ரஷியா தாக்குதலில் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5வது நாளாக போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைனின் ஆயுதப்படையினரின் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலையும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.