ஆதரவு இல்லை என்றதால் இந்தியர்களை உக்ரைன் ராணுவ வீரர்கள் தாக்குகிறார்கள்
1 min readUkrainian soldiers attack Indians for lack of support
28/2/2022
உக்ரைனை இந்தியா ஆதரிக்கவில்லை என்று காரணத்தினால் உக்ரைன் வீரர்கள் இந்திய மாணவர்களை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
ஆதரவு இல்லை
ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர்.
உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு தற்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போலந்து எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள சில உக்ரேனிய ராணுவ வீரர்கள், இந்திய மாணவர்களின் குழுவை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி அவர்களை அடித்து மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வகுப்புத் தோழர் ஒருவர், இவர்கள் அனைவரும் தனது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் என தகவல் அளித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, எல்லையில் இருந்த இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவ வீரர்கள் தாக்கியதாகவும், அவர்களை பயமுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியும் ஒரு மாணவியின் கையை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. குற்றச்சாட்டுகளின்படி, தாக்குதலை நடத்திய உக்ரைன் வீரர்கள் மாணவர்களிடம் “உங்கள் இந்திய அரசு உக்ரைனுக்கு ஆதரவளிக்கவில்லை, நாங்கள் ஏன் உங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
ராகுல் காந்தி
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பான வீடியோ ஒன்றை டுவீட் செய்துள்ளார், அதில் “இந்தக் காணொளிகளைப் பார்க்கும் போது இதுபோன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் நான் வருந்துகிறேன். எந்த பெற்றோருக்கும் இது போன்ற நிலைமை வந்துவிட கூடாது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். நமது மக்களை நாம் கைவிட கூடாது”. என்று கூறியுள்ளார்.