கண்ணாயிரம் கையில் சாராய கேன்/ நகைச்சுவை கதை
1 min read
Kannayiram with Alcohol can / STory by Thabasukumar
12.3.2022
கண்ணாயிரம் உடல் பலவீனமாக இருந்ததால் அவர் பச்ச முட்டை சாப்பிடவேண்டும் என்று பயில்வான் பலவேசம் கூறினார். அவரிடம் சிலம்பம் கற்றுக்கொள்ள விரும்பிய கண்ணாயிரம் பச்ச முட்டைக்கு எங்கு போவேன் என்று மனைவி பூங்கொடியிடம் புலம்பியபடி வந்தார்.பச்ச முட்டை என்றால் கோழி முட்டைதான் என்று பூங்கொடி கூறினார். ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கோழிமுட்டை பச்சையா இல்ல..வெள்ளையா இல்ல இருக்கு என்று வாதிட்டார்.
பூங்கொடி அவரிடம் என் செல்போனிலே கூகுளிலே தேடினா பச்ச முட்டை எதுன்னு கண்டுபிடிச்சிடலாம் என்று பூங்கொடி யோசனை சொன்னார்.சரி என்ற படி கண்ணாயிரம் பூங்கொடியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வீட்டில் செல்போனில் கூகுளில் பச்சமுட்டையை பூங்கொடி தேடினார்.அதில் ஈமு கோழி முட்டை பச்சமுட்டை என்று போட்டிருந்தது.அதை பார்த்ததும் பூங்கொடி ஏங்க ஈமு கோழி முட்டையைதான் பச்சமுட்டைன்னு போட்டிருக்கு..என்றார்.
உடனே கண்ணாயிரம்…ம்..நான் சொன்னேன்ல..நீதான் பச்சமுட்டைதான் கோழி முட்டைன்னு நீ சொன்னால்ல.பாத்தியா நான் சொல்லுறது சரியா இருக்கா என்று கேட்டார். அதை கேட்ட பூங்கொடி …சரி..நீங்க சொன்னது சரிதான். இந்த ஈமு கோழி முட்டையை பாருங்க…இதை எங்கேபோய் வாங்குறது என்று என்றார். கண்ணாயிரம் செல்போனில் அந்த ஈமு கோழிமுட்டையை பார்த்தார். ஆ…இது பச்ச நிறத்திலே இல்லையே…நீல நிறத்தில இல்ல இருக்கு…ஒரே குழப்பமா இருக்கே…என்ன பண்ணலாம் என்று யோசித்தார்.பின்னர் நாளைக்கு சிலம்பு கற்றுக்கொடுக்க பயில்வான் பலவேசம் வருவாருல்ல…அவரிடம் கேட்டுக்குவம் என்று சொன்னார்.
இதையடுத்து பூங்கொடி… கூகுளிலே எல்லாம் போட்டிருக்குமா..இந்த கழுதைக்கு இந்தியிலே என்ன போட்டிருக்குன்னு பாரேன் என்றார்.
பூங்கொடி உடனே கூகுளில் தேடினார். அதில் கழுதைக்கு இந்தியில் கதா என்று போட்டிருந்தது. அவரிடம்….ஏங்க…இந்தியிலே எதுவும் தெரியலன்னா..இதிலே பாத்துக்கலாம்..கழுதைக்கு இந்தியிலே கதா ங்க….இனி பக்கத்து வீட்டு அக்காவிடம் போய் எதுவும் கேட்க வேண்டாம் என்று சொன்னார். அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு வடநாட்டில் காணாமல்போன கழுதை நினைவுக்கு வந்தது. அதை கண்டு பிடிச்சிருப்பாங்களா….தெரியலையே என்றார்.
கண்டு பிடிச்சிருந்தா செய்திசாரலில் போட்டிருப்பாங்கள…இதுவரை போடலையே என்றார் பூங்கொடி.உடனே கண்ணாயிரம்…அப்படியா…அதை எப்படி மீட்கிறதுன்னு யோசிக்கணும்…பார்ப்போம் என்றார்.
உடற்பயிற்சி கூடத்துக்கு வெயிலில் நடந்து சென்றுவந்ததால் கண்ணாயிரத்துக்கு களைப்பாக இருந்தது. கை கால்களை கழுவிவிட்டு கட்டிலில் வந்து அமரந்தார். தூக்கம் கண்ணை கட்டியது. லேசாக சாய்ந்து படுத்தவர் அப்படியே தூங்கிவிட்டார்.அவரது ஆழ்மனதில் கழுதையை மீட்கவேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அது கனவாக மலர்ந்தது.
கண்ணாயிரம் வீட்டு கதவை வடநாட்டு போலீசார் தட்டினார்கள். யாரது என்றபடி பூங்கொடி கதவை திறந்தார். போலீசாரை பார்த்ததும் யார் வேணும் என்று கேட்டார்.அவரிடம் கண்ணாயிரம் இருக்காரா…அவரிடம் பேசணும் என்றார்கள். அந்த சத்தம் கேட்டு கண்ணாயிரம் மெல்ல எட்டிப்பார்த்தார். போலீசார் அவரிடம்…வாங்க உங்களிடம் கொஞ்சம் பேசணும் என்று இந்தியில் பேசினார்கள். அப்போது கண்ணாயிரம் இந்தி தெரியாது என்றார். வடநாட்டு போலீசாருடன் வந்த தமிழ் நாட்டு போலீஸ்காரர் ஒருவர்…கண்ணாயிரம்..நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க…நம்ம ஊருல காணாம போன கழுதையை நீங்க கண்டுபிடிச்சிங்கில்ல… அதே மாதிரி வடநாட்டில் காணாம போன கழுதைகளையும் நீங்க கண்டுபிடிக்கணுமுன்னு சொல்லுறாங்க…நீங்க அவங்க கூட வடநாட்டுக்கு போயி கழுதையை கண்டுபிடிங்க…உங்களுக்கு பரிசு தொகையெல்லாம் கொடுப்பாங்க என்றார்.
பரிசு என்றதும் பூங்கொடி….ஏங்க சரின்னு ஒத்துக்கிங்க என்றார். அதற்கு கண்ணாயிரம் எனக்கு இந்தி தெரியாதே என்றார்.அதற்கு தமிழக போலீஸ்காரர் அவரை பார்த்து கண்ணாயிரம் கவலைப்படாதே…தமிழில் மொழிபெயர்த்து சொல்ல அங்க ஆள் இருப்பாங்க. நீங்க பயப்படாம போய்வாங்க என்று சொன்னார். கண்ணாயிரம் உடனே நாளைக்கு எனக்கு சிலம்பாட்ட கிளாஸ் இருக்கு. அதைவிட்டுட்டு எப்படி வடநாட்டுக்கு போகமுடியும் என்று கேட்டார். உடனே அவர்…கண்ணாயிரம் சிலம்பாட்டகிளாசை ஒருவாரம் தள்ளி வையுங்க…வடநாட்டுக்கு போயி கழுதையை கண்டுபிடிச்சி பரிசுவாங்கிட்டு வந்தபிறகு சிலம்பாட்ட கிளாசுக்கு போகலாம் என்றார்.
அதை கேட்டதும் பூங்கொடி சரின்னு சொல்லுங்க சிலம்பாட்ட கிளாசை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
கண்ணாயிரம் அப்படியா சிலம்பாட்டத்தை…பிறகு பார்த்துக்கொள்ளலாமா… நாளைக்கு பயில்வான் பலவேசம் வந்தாருன்னா விசியத்தை சொல்லியிரு…பச்ச முட்டைன்னா என்ன முட்டைன்னு கேளு என்று பூங்கொடியிடம் கண்ணாயிரம் சொன்னார்.அவர் சரிங்க நான் பாத்துக்கிறன்…நீங்க புறப்படுங்க…என்றார்.
கண்ணாயிரம் உடனே என்னுடைய வேட்டி சட்டையெல்லாம் எடுத்து சூட்கேசுல வை..செலவுக்கு பணம் கொடு…எதுக்கும் இந்தி கற்றுக்கொள்வது எப்படிங்கிற புத்தகத்தையும் பெட்டியிலேவை…இந்தியிலே ஏதாவது தெரியலன்னா பாத்துக்குவன்…சரியா என்றார்.
பூங்கொடி உடனே பத்து நிமிடம் பொறுங்க …எல்லாத்தையும ரெடி பண்ணிடுறன் என்றார்.கண்ணாயிரம் வடநாட்டு போலீசாரையே பார்த்துக்கொண்டிருந்தார்.அவர்கள் கடிகாரத்தை பார்த்தார்கள்.பத்து நிமிடம் கழிந்ததும் பூங்கொடி கையில் சூட்கேசுடன் வெளியே வந்தார்.கண்ணாயிரத்திடம் பத்திரமா பாத்துக்குங்க. திருட்டு போன..கழுதையை கண்டுபிடிக்க போறேன்னுட்டு சூட்கேசை தவறவிட்டுறாதீங்க…கண்ட இடத்திலும் சாப்பிடாதீங்க…ஓமவாட்டர் வைச்சிருக்கேன் அப்பப்போ குடிங்க…என்றார்.
கண்ணாயிரம் தலையை ஆட்டிவிட்டு லேசாக இருமினார்.அதை பார்த்த பூங்கொடி ஏங்க இப்பவே இருமுறீங்க…கொஞ்சம் பொறுங்க….ஒரு கேனில் மினரல் வாட்டர் தர்ரேன்.அதை குடிங்க என்றார். அந்த கேனை தூக்கிக்கிட்டு நான் எப்படி அலையுறது என்று கண்ணாயிரம் கேட்டார். நீங்க மக்கா இருக்கீங்க…போலீஸ் வேனில்வைச்சுடுங்க…தேவைப்படும்போது எடுத்து குடிங்க என்றார் பூங்கொடி. அதை கேட்டதும் கண்ணாயிரம் வேண்டாவெறுப்பாக சரி என்றார்.
பூங்கொடி ஒரு கேனில் மினரல்வாட்டர் கொண்டுவந்து கொடுத்தார்.கண்ணாயிரம் ஒருகையில் மினரல்வாட்டர் கேனையும் மறுகையில் சூட்கேசையும் தூக்கிக்கொண்டு புறப்பட்டார்.அதை பார்த்ததும் பூங்கொடி நில்லுங்க என்று கத்தினார். கண்ணாயிரம் என்னவோ ஏதோ என்று விழித்தபோது பூங்கொடி குங்கும டப்பாவோடு ஓடிவந்தார்.கண்ணாயிரத்தின் நெற்றியில் திலகமிட்டு சென்று வென்று வாருங்கள் என்று புன்னகையுடன் வாழ்த்திவழியனுப்பிவைத்தார்.
கண்ணாயிரம் போலீசார் புடைசூழ போலீஸ் வேனை நோக்கி நடந்தார்.அவர்கையில் மினரல் வாட்டர் கேனையும சூட்கேசையும் ஆட்டியபடி குனிந்தவாறு சென்றார். அப்போது அவரது நண்பர் வேகமாக வந்தார். கண்ணாயிரத்தை போலீஸ் கைது பண்ணிட்டு போகுதோ என்று நினைத்தார். கண்ணாயிரம் கையில் மினரல்வாட்டர் கேன் இருப்பதை சாராய கேன் என்று நினைத்து கொண்டு கண்ணாயிரம் இந்த தொழிலை எப்ப ஆரம்பிச்சே….எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இந்த தொழில் செய்யலாமா..என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம் விவரம் புரியாமல் விழித்தபடி நின்றார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.